தேர்தல் பணி-அழகிரி, ஸ்டாலினுடன் மாமல்லபுரத்தில் கருணாநிதி ஆலோசனை

posted in: அரசியல் | 0

சென்னை: திமுகவேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் தனது மகன்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் இன்று மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு வைத்து இருவருடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

இன்று காலை முதல்வர் கருணாநிதி திடீரென மாமல்லபுரம் கிளம்பிச் சென்றார். அவருடன் அழகிரி, ஸ்டாலின் ஆகியோரும் சென்றனர். இவர்கள் தவிர அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் சென்றுள்ளனர்.

மாமல்லபுரத்தில் வைத்து தேர்தல் பணிகள் தொடர்பாக கருணாநிதி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்தல் பணிகள், தேர்தல் யுத்திகள் உள்ளிட்டவை குறித்து அழகிரி, ஸ்டாலினுடன் முதல்வர் விவாதித்ததாக தெரிகிறது. அதை விட முக்கியமாக இருவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டாலினை சந்தித்த யுவராஜா:

இதற்கிடையே தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அப்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக பாடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா, நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறும். கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். அதற்காக நாங்கள் உழைப்போம். திமுக கூட்டணி வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் என அனைவரும் வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *