தேர்தல் ரெய்டு-ரூ.1.77 கோடி தங்கம், பணம் சிக்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.77 கோடி மதிப்பிலான பணம், தங்க நகை, பட்டுப்புடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் 5 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குண்டல்பட்டி, பாலக்கோடு தக்காளி மண்டி பைபாஸ், திப்பம்பட்டி கூட் ரோடு மற்றும் தொப்பூரில் 2 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வருவாய் துறையினர் மற்றும் உள்ளுர் போலீசார் சேர்ந்து 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு நடத்திய சோதனையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5 கார்களில் இருந்து ரூ. 43 லட்சம் வரை சிக்கியுள்ளது.

குண்டல்பட்டி சோதனை சாவடியில் மட்டும் ஒரு காரில் இருந்து ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் சிக்கியது. தொப்பூர் சோதனை சாவடியில் ஒரு காரில் இருந்து ரூ. 14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னொரு காரில் இருந்து ரூ. இரண்டரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 27 லட்சத்து 29 ஆயிரம் கிருஷ்ணகிரியில் உள்ள வருமானவரித்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காரில் பணத்தை எடுத்து வந்தவர்கள் முறையான கணக்கை காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணமும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று சேலத்தில் சொகுசு காரில் இருந்து 41 பைகளில் இருந்த சேலைகளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காரில் வந்த காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில துணை தலைவர் அசோக் லோடா என்ற அசோக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பதற்காக தன் காரில் எப்பொழுதும் சேலைகள் இருக்கும் என்றார்.

வந்தவாசி அருகே நடந்த சோதனையின்போது ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 800 பட்டுப் புடவைகள் சிக்கின. பரமத்தி வேலூர் அருகே நடந்த சோதனையின்போது 3.5 கிலோ எடையுள்ள நகைகள் சிக்கின.

தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள்:

இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வெளிமாநில ஐ.ஜி.க்கள் இன்று சென்னை வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநில போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஜிதேந்தர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜார்ஜி அகமது, ஐ.ஜி. பி.ஆர்.கே.நாயுடு, ஜார்க்கண்ட் மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே. பாண்டே, ஆந்திர மாநில ஐ.ஜி. கே.வி.ஆர்.என்.ரெட்டி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கே.வி.ஆர்.என்.ரெட்டி தவிர மற்ற 4 பேரும் தேர்தல் பணியாற்ற இன்று தமிழகம் வருகின்றனர்.

தமிழகம் வரும் அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விடுதியில் தங்குகிறார்கள். பின்னர் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

பதட்டமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். வாக்காளர்களை கவர அன்பளிப்புகள் வழங்குபவர்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் சமயத்தில் ரகளையில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *