பெங்களூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுஉலைகள் வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு நெருக்கடி காரணமாக அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் ஒரு உத்தரவு ஜப்பானிய பணியாளர்களை நெகிழ வைத்துள்ளது.
விப்ரோவுக்கு ஜப்பானில் 400 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 115 பேர் இந்தியர்கள். இந்திய நிறுவனமான விப்ரோ, இந்தியர்களை மட்டும் திருப்பி அழைத்துக் கொள்ளும் என்றுதான் அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் விப்ரோ தனது அறிவிப்பில், இந்தியர்கள் மட்டுமல்ல, ஜப்பானிய பணியாளர்களும் சேர்ந்து வரட்டும். அல்லது ஜப்பானின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் அவர்களுக்கு உறுதுணையாக பிற ஊழியர்கள் செயல்படட்டும் என்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக விப்ரோ சிஇஓ டி கே குரியன் கூறுகையில், “ஜப்பான் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியப் பணியாளர்களை மட்டும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு மற்றவர்களை அப்படியே விட்டுவிடுவது சரிதானா? எல்லோரும் மனிதர்கள்தான். இந்தியப் பணியாளர்களுக்கு வந்த கஷ்டம்தான் ஜப்பானிய பணியாளருக்கும் வந்துள்ளது. எனவே அனைவரும் சமமாகத்தான் நடத்தப்பட வேண்டும்.
இந்தியர்களோடு ஜப்பானிய பணியாளர்களும் வருவதாக இருந்தால் வரலாம். அல்லது இந்த நெருக்கடியான நேரத்தில், ஜப்பானியருக்கு கைகொடுத்து உதவலாம். நாடு, மொழி , வர்த்தக எல்லைகளைக் கடந்து, மனிதாபிமான அடிப்படையில் ஜப்பானியருக்கு தோள்கொடுப்போம்”, என்றார்.
விப்ரோவின் இந்த அறிவிப்பு தங்களை வியக்க வைத்துள்ளதாகவும், இந்த மனிதாபிமானத்தை மதிப்பதாகவும் ஜப்பானிய பணியாளர்கள் கருத்து தெரிவித்தனர். விரைவில் இந்த சிக்கலிலிருந்து மீண்டு எழுவோம் என்றும் அவர்கள் உறுதியாகக் கூறினர்.
Leave a Reply