சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாடகைக்கு பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவைகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. பொதுவாக, தேர்தலின் போது, வாக்காளர்களை கவரும் வகையில், தலைவர்கள் பறந்து பறந்து பிரசாரம் செய்வது வழக்கம். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுல், பா.ஜ.,வின் அத்வானி, அ.தி.மு.க.,வின் ஜெயலலிதா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
தற்போது நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போது, கட்சித் தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள், விமானம், ஹெலிகாப்டர் போன்றவற்றில் பயணம் செய்து பிரசாரம் செய்ய ஆகும் செலவுகள், அந்த தொகுதி வேட்பாளரின் செலவில் சேராது என்றும், அவர்களின் இந்த பயணம் குறித்து ஏழு நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷன் அல்லது தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் அவர்களின் கட்சி தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது.
தொகுதியில் நிற்கும் வேட்பாளர் சார்பாக அவரது குடும்ப உறுப்பினரோ அல்லது கட்சியை சேர்ந்த பிரதிநிதியோ, தலைவர்களின் பயணத்திற்கான போக்குவரத்து செலவை ஏற்பதாக இருந்தால் 50 சதவீதம் மட்டுமே வேட்பாளரின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும். முக்கிய தலைவர்கள் பயணத்திற்கான போக்குவரத்து செலவை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஏற்பதாக இருந்தால், 50 சதவீத செலவை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முக்கிய தலைவர், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவராக இருந்தால், அவர் பங்கு கொள்ளும் பேரணி, போக்குவரத்து ஆகிய செலவுகளை குறிப்பிட்ட வேட்பாளரோ அல்லது மற்ற வேட்பாளருடன் சேர்ந்து செலவை பகிர்ந்து கொள்ளலாம். தலைவர்களுடன் விமானத்தில் செல்லும் அவரது ஊழியர், பாதுகாப்பு வீரர், மருத்துவ ஊழியர் ஆகியோருக்கு இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பொருந்தாது. வேட்பாளரின் செலவு கணக்கிலும் இது வராது. ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய தலைவருடன் வரும் “டிவி’ மற்றும் பத்திரிகையாளர்களின் செலவுக்கு விலக்கு இல்லை.
Leave a Reply