பலவீன பந்து வீச்சு-ஸ்டிராங்கான பேட்டிங்: பாக்.கை சந்திக்கும் இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்னும் சில மணி நேரங்களில் மோதலைத் தொடங்கவுள்ளன. இரு அணிகளும் எந்த வகையிலும் குறைந்தவை இல்லை என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.


உள்ளூரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தியாவுக்கு பக்க பலமாக இருக்கும். அதை விட முக்கியமாக தங்களது ஹீரோ யுவராஜ் சிங்கின் அட்டகாச ஆட்டத்தைக் காண பஞ்சாப் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் உள்ளனர். அதேபோல ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு இந்தப் போட்டியிலாவது சிறப்பாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பேட்டிங் படு ஸ்டிராங்காக உள்ளது. ஷேவாக், கம்பீர், சச்சின், விராத் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, டோணி வரை ஒரு சிக்கலும் இல்லை. இவர்களில் பாதிப் பேர் சிறப்பாக விளையாடினால் கூட போதும், பெரிய ஸ்கோரை எட்டி விட முடியும். தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் மற்றவற்றை விராத் கோலியும், யுவராஜ் சிங்கும் பார்த்துக்கொள்வார்கள்.

ரெய்னா கடந்த காலிறுதிப் போட்டியில்தான் சிறப்பாக விளையாட முடிந்தது. டோணியை நம்ப முடியவில்லை. விராத் கோலியும் ஆரம்பத்தில் பிரமாதப்படுத்தினார். பின்னர் அமைதியாகி விட்டார். ஆனால் யுவராஜ் சிங் ஆரம்பத்திலிருந்தே பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். கம்பீர், ஷேவாக், சச்சின் மாறி மாறி பார்மை வெளிப்படுத்துகின்றனர்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் பெரும் கவலை பவுலிங் மட்டுமே. ஆணித்தரமான பவுலிங் ஆர்டர் நம்மிடம்இல்லை. ஜாகிர்கான் நன்றாகத்தான் பந்து வீசுகிறார். இருப்பினும் சில சமயங்களில் சொதப்பி விடுகிறார். முனாப் படேலிடமும் அதே நிலைதான். ஆசிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் என்று பலர் இருந்தாலும் அட்டகாசமான ஸ்டிரைக்கராக யாரும் இல்லை என்பது ஒரு பலவீனம்தான்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ஹர்பஜன் சிங், அஸ்வின், பியூஷ் சாவ்லா என பெரிய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களில் சாவ்லா பெரும் தோல்வி. அஸ்வின் கடந்த காலிறுதிப் போட்டியில் அழகாக பந்து வீசி அருமையாக இரண்டு விக்கெட்களை சாய்த்தார். ஹர்பஜன் சிங் இன்னும் தனது முழுத் திறமையை வெளிக் கொணரவில்லை.

அதேசமயம், பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு மிக சிறப்பாக உள்ளது. கேப்டன் அப்ரிதி தொடர்ந்து பிரமாதமாக பந்து வீசி வருகிறார். பேட்டிங்கிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அப்துல் ரஸ்ஸாக், ரஹ்மான் என நல்ல பந்து வீச்சு வரிசையுடன் உள்ள பாகிஸ்தான் அணி, நிச்சயம் இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு பெரிய சவால்தான்.

அப்துல் ரஹ்மான், சோயப் அக்தர், உமர் குல், அப்துல் ரஸ்ஸாக், அப்ரிதி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இவர்களில் அக்தர் இப்போட்டியில் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. அவருக்குப் பதில் வஹாப் ரியாஸ் இடம் பெறலாம். இவருக்கு அனுபவம் போதாது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆசிஷ் நெஹ்ரா, ஜாகிர்கான், முனாப் படேல், ஸ்ரீசாந்த் என வேகப் பந்து வீச்சாளர்களும், ஹர்பஜன் சிங், அஸ்வின், பியூஷ் சாவ்லா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர யூசுப் பதான், யுவராஜ் சிங் என இரண்டு ஆல் ரவுண்டர்களும் உள்ளனர்.

இவர்களில் ஜாகிர்கான், முனாப் படேல், நெஹ்ரா இன்றைய போட்டியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. இவர்கள் போக ஹர்பஜன் சிங்குடன், அஸ்வினுக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்கலாம். யுவராஜ் சிங் சிறப்பான பார்மில் உள்ளார்.

இந்திய பந்து வீச்சு மொத்தத்தில் சுமாராகவே உள்ளது. இருந்தாலும் இதுவரை எப்படியோ சமாளித்து விட்டனர். ஆனால் இன்றைய போட்டியில் விளையாட்டுத்தனமாக இருக்க முடியாது என்பதால் இந்திய பந்து கண்டிப்பாக பொறி பறக்க இருக்க வேண்டியது அவசியமாகும்.

பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்கி பெரிய ஸ்கோரை குவிப்பது மட்டுமே இந்தியாவுக்கு மிக மிக நல்லது, பாதுகாப்பானது. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரிவர செய்து விட்டால் போதும், பிறகு வெற்றி நம் வசம்தான் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *