பிளஸ்டூ தேர்வில் குளறுபடியான கேள்விக்கு முழு மார்க்-தேர்வுகள் துறை இயக்குநர்

posted in: கல்வி | 0

சென்னை: பிளஸ்டூ தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சரியான முறையில் அச்சாகாமல் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் பிளஸ்டூ கணித தேர்வு நடந்தது. இதில் ராசிபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் 1,350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கணித வினாத்தாளை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் `ஏ’ பிரிவு மற்றும் `பி’ பிரிவு வினாக்கள் சிலவற்றில் 1 மார்க், 6 மார்க், 10 மார்க் கேள்விகளில் டிவைடர் குறி, மைனஸ் குறி, சமக்குறிகள் போன்றவை சரியாக அச்சாகவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

சுமார் 58 மதிப்பெண்கள் வரை உள்ள கேள்விகளில் குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக அச்சாகவில்லை என்றும், இதனால் அந்த கேள்விகளுக்கு எப்படி பதில் எழுதுவது என்பது பற்றி குழப்பமாக இருப்பதாகவும் கூறினார்கள். வினாத்தாள்களை தேர்வு மைய அதிகாரிகளிடம் காட்டினார்கள்.

மேலும், தேர்வு எழுதி முடித்த பின்னர், கேள்வித்தாள் குளறுபடியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளியின் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

வெண்ணந்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஆண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அங்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த குளறுபபடி குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கீரனூரில் மட்டும்தான் கணித வினாத்தாளில் 3 கேள்விகள் சரியாக அச்சாகாமல் இருந்ததாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி எந்த தேர்வு மையத்திலாவது வினாத்தாள் சரியாக அச்சாகாமல் இருந்து அதை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக புரிந்து பதில் அளித்து இருந்தால் அந்த கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்.

தவறாக பதில் அளித்திருந்தாலும் மார்க் தரப்படும். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேள்வித்தாள் வரவழைக்கப்பட்டுள்ளது. எத்தனை கேள்விகள் அவ்வாறு சரியாக அச்சாகாமல் இருக்கின்றன என்பதை பார்த்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *