டெல்லி: பாரத் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு பொருந்தும் எஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அம்பாசடர் கிராண்ட் மாடலை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மக்களின் பெருமைமிகு காராக வலம் வந்த அம்பாசடர் பல்வேறு காரணங்களால் மார்க்கெட்டை இழந்தது. பார்த்து பார்த்து அலுத்துப்போன வடிவமைப்பு, நவீன வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால், இந்திய மக்களின் கவனம் திசை மாறியது. இதனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் ஆட்சி செய்து வந்த அம்பாசடர் வெகு சீ்க்கிரமாக தனது இடத்திலிருந்து பின்தங்கியது.
இந்நிலையில், மார்க்கெட் இழந்த அம்பாசடர் காரை மீண்டும் ஒரு ரவுண்டு வர செய்வதற்கான முயற்சிகளை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதன் முதல்படியாக மேம்படுத்தப்பட்ட அம்பாசடர் கிராண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோ, மியூசிக் சிஸ்டம், டிஜிட்டல் டிரிப் மீட்டர், மொபைல் சார்ஜர் போன்ற அம்சங்களுடன் அம்பாசடர் கிராண்ட் வெளிவந்துள்ளது. இதில், பொருத்தப்பட்டுள்ள 1,817 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் 71 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பார்த் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாடு விதிகளுடன் வந்துள்ள அம்பாசடர் கிராண்டுக்கு ஓர் ஆண்டுக்கு செல்லத்தக்க 50,000 கி.மீ வாரண்டி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் பிளாக், லூனார் சில்வர், ஃபயர் பிரிக் ரெட், ஆயிஸ்ட்டர் புளு, எக்ரூ பியேஜ் மற்றும் கிரிஸ்டல் ஒயிட் ஆகிய ஆறு கலர்களில் அம்பாசடர் கிராண்ட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்பாசடர் கிராண்ட் டெல்லியில் ரூ 6.5 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூறியுள்ளது. மேலும். இந்த ஆண்டில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு கட்டுப்பாடு அம்சம் கொண்ட அம்பாசடர் கிராண்ட் டீசல் மாடலும், அம்பாசடர் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply