பூகம்பத்தை தாங்குமா கட்டடங்கள்? பேரிடர்ஆணையம் கவலை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட ஜப்பானிய கட்டடங்களே, சுனாமி மற்றும் பூகம்பத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் சிதைந்துவிட்டன.

அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்கள், இயற்கை பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் இல்லை என, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழி பேரலை, செண்டாய் உள்ளிட்ட பெரிய நகரங்களை கபளீகரம் செய்து விட்டன. 20 ஆயிரம் பேரை சுனாமி கொள்ளை கொண்டு விட்டது. அதிநவீன தொழில்நுட்பங்கள், அடிப்படை விதிகளை முறையாக பின்பற்றி கட்டப்பட்ட கட்டடங்களே இந்த இயற்கை சீற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரைமட்டமாகி விட்டன. அமெரிக்காவில் கட்டப்படும் வானுயர்ந்த கட்டடங்கள், அனைத்து வித பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் கடந்த 70 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 38 நகரங்கள், நிலநடுக்கம் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஜப்பானுக்கு நேர்ந்த கதியை பார்த்தாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்று உயரிய தொழில்நுட்பங்களை பின்பற்ற நமக்கு நீண்ட காலம் ஆகும். இனிமேலாவது கட்டப்படும் கட்டடங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி, பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்கும் விதத்தில் கட்டப்பட வேண்டும்.இது குறித்து பலமுறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டு விட்டது. ஆனால், எந்த அரசும் இதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.இவ்வாறு தேசிய பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

டில்லியில் நிலநடுக்கம் : டில்லி, ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் நேற்று, நிலநடுக்கம் காணப்பட்டது.ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று, 5.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 3.30 மணிக்கு டில்லி, ஸ்ரீநகர், நொய்டா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீட்டை விட்டு சாலைகளில் வெளியேறினர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ, கட்டடங்களுக்கோ சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *