புதுடில்லி : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் வகையில், சுங்க மற்றும் கலால் வரி, பட்ஜெட்டில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது பற்றிய அறிவிப்பை, பிரணாப் முகர்ஜி வெளியிடவில்லை. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. கடந்தாண்டு ஜூனில், எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு, மத்திய அரசு வசம் இருந்தது. இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் பின், ஆறு முறைக்கு மேல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், டீசல் விலையை உயர்த்துவதற்கு மட்டும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும், 5 சதவீத சுங்க வரி தொடர்ந்து இருக்கும். இதில், எவ்வித மாற்றம் இல்லை என்றும், கச்சா எண்ணெயிலிருந்து பிரிக்கப்படும் பெட்ரோல், டீசலுக்கு, 7.5 சதவீத கலால் வரியிலும் மாற்றம் இல்லை என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெட்ரோலுக்கு, 14.35 ரூபாயும், டீசலுக்கு, 4.60 ரூபாயும் கலால் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா, 75 சதவீதம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைத்தான் நம்பியிருக்கிறது.நடப்பு பட்ஜெட்டில், 23 ஆயிரத்து 640 கோடி தான், மானியத்திற்கு, பிரணாப் முகர்ஜி ஒதுக்கியுள்ளார். நடப்பாண்டில், 38 ஆயிரத்து 386 கோடியாக இருந்த மானியத்தை விட, 15 ஆயிரம் கோடியை குறைத்துள்ளார் என்பதால், விலை உயர்வை பொதுமக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் போல தெரிகிறது.
Leave a Reply