பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் பெண்களின் சாதனையை பராட்டும் வகையிலும், தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்றைய தினம் பெண்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சீனா, ரஷ்யா, வியட்நாம், பல்கேரியா ஆகிய நாடுகளில் இத்தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1911ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம், இந்தாண்டு நூறாவது ஆண்டை கொண்டாடுவது இத்தினத்தின் சிறப்பம்சம். இன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி, பெண் நண்பர்கள் மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு, ஆண்கள் பரிசுகள் மற்றும் பூங்கொத்து வழங்கி கவுரவிக்கின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத்துக்கு சமமாக இத்தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
ராக்கெட் வேகத்தில்: சில ஆண்டுகளுக்கு முன் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்பட்டு கிடந்தனர். ஆனால் தற்போதைய நவீன இந்தியாவில் பெண்கள் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில், ஆண்களை விட அசுர வேகத்தில் முன்னேறி வருகின்றனர். இந்தியாவில் பெண்கள் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளனர்.விண்வெளி, விளையாட்டு போன்றவற்றிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஐ.டி., துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். சில பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பெண்களின் வளர்ச்சியை வைத்து, நாட்டின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஆண்களைப் போன்று சம வேலை, சம ஊதியம் உள்ளிட்ட சில விஷயங்களில் பெண்களுக்கு சம அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
சிறப்பு திட்டங்கள்: ஒவ்வொரு அரசும் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் தீட்ட வேண்டும். அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்குரிய அந்தஸ்தை வழங்குவதற்கு முன்வர வேண்டும். வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை முற்றிலுமாக ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்களும், பெண்களுக்கு உரிய உரிமை மற்றும் கவுரதவத்தை வழங்கி அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணை புரியவேண்டும்.
Leave a Reply