பொறுப்பற்ற கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை: துணைவேந்தர்

posted in: கல்வி | 0

சென்னை: “மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட கல்லூரிகளே காரணம்” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக் கழக கல்விக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், இந்த ஆண்டு புதியதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை பல்கலையில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட வணிக இயல் எம். பில்., படிப்பு மீண்டும் துவக்கப்படும். எம்.டெக். பாட திட்டத்தில் புதிய பிரிவு, உட்பட பல்வேறு சான்றிதழ் படிப்புகள், பட்டய படிப்புகள், புதிதாக பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில், துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: கடந்த சில நாட்களாக மாணவர்களின் செயல்களால், உயர் கல்வித்துறையின் பல்கலைக் கழகத்தின் பெயர் கெட்டு போயுள்ளது. பஸ் டே கொண்டாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். ஏன் என்றால், இந்த மாணவர்கள் தான் நாம் சொன்னதற்காக வீடு, வீடாக சென்று 5 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணிகளை விற்றவர்கள். இவர்கள் தான், அரசின் நூல் நிலையத்திற்கு 7 லட்சம் நூல்களை சேகரித்துக் கொடுத்தவர்கள். எனவே, நான் அவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும், கல்லூரி முதல்வர்களையும் தான் குறை சொல்வேன்.

மாணவர்கள் பெற்றோர்கள் சொன்னால் கூட கேட்க மாட்டார்கள். ஆசிரியர்கள் சொன்னால் கேட்பார்கள். எனவே அவர்களுக்கு ஒழுக்கத்தையும் நல்ல வழியையும் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும். இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் பணி புரிந்த பேராசிரியர்கள் இன்று மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள். அவர்கள் மனசாட்சியுடன் பணிபுரிய வேண்டும். பலர் பேப்பர் திருத்தும் பணிக்கு கூட வருவதில்லை. வேலைக்கு வந்தாலும், வராவிட்டாலும், பாடம் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும், விடுமுறையில் இருந்தாலும் அனைவருக்கும் ஊதியம் கிடைக்கிறது. எனவே மாணவர்களுக்கு நல்லவற்றை கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேராசிரியர்கள் செயல்பட வேண்டும்.

பல கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. ஆனால், அதற்கு படித்தவர்கள் இல் லை என காரணம் சொல்கின்றனர். படித்த தகுதியான பல பேர், வேலை இல்லாமல் அலைகின்றனர். ஆனால், பல கல்லூரிகளிலோ, பேராசிரியர் பணியிடங்களில் தகுதியற்ற நபர்கள் அமர்த்தப்பட்டு, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

பேராசிரியர்களை நியமிக்கும் தகுதிகள் ஆண்டுக்கு ஆண்டு மாறினாலும், ஒரு சில விஷயங்கள் மாறுவதில்லை. ஒரு சில படிப்புகளை தவிர மற்றவற்றிற்கு, அரசு நிர்ணயித்த தகுதியினை உடையவர்கள் தான் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும். பல கல்லூரிகளில், பேராசிரியர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் நல்ல ஊதியம் தருவதில்லை. பல இடங்களில் முதல்வர்களே இல்லை. நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில், ஒரு சுயநிதி கல்லூரிகள் கூட வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்யவில்லை. அப்படி இருந்தால் எப்படி ஆட்கள் கிடைப்பார்கள். இப்படி இருந்தால் கல்வி எப்படி முன்னேறும்.

மூன்று கல்லூரிகள் எவ்வித வசதிகளும் இல்லாமல் செயல்படுகின்றன. அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 32 கல்லூரிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்கலைக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமலேயே உள்ளன. இவை எல்லாம் எனக்கு பெரிய அவமானம். வரும் 11ம் தேதி அனைத்து பிரச்னைகளையும் பற்றி பேச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். இனியும், கல்லூரிகளில், பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. பல்கலைக் கழகம் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *