போலி பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்று யு.ஜி.சி. அடையாளம் கண்டுள்ளது.

யு.ஜி.சி. சட்டத்தை(1956) மீறி செயல்படும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலை மனிதவளத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, “மொத்தம் 21 போலி பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 8 உத்திரப் பிரதேசத்திலும், 6 டெல்லியிலும், பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி கல்வி நிறுவனமும் உள்ளன.

மேலும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ), நாட்டில் மொத்தம் 350 அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளை நடத்தி வருகின்றன என்று அடையாளம் கண்டுள்ளது. இது ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை மீறிய செயலாகும்.

இந்த 350 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 75 மாகாராஷ்டிரா மற்றும் டெல்லியிலும், 52 ஆந்திராவிலும், 34 மேற்கு வங்கத்திலும், 30 உத்திரப் பிரதேசத்திலும், 27 கர்நாடகாவிலும், 17 ஹரியானாவிலும், 14 தமிழ்நாட்டிலும், 9 சண்டிகரிலும், 4 குஜராத்திலும், 3 பஞ்சாபிலும், 2 பீகார், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் கோவாவிலும், 1 உத்திரகான்ட் மற்றும் கேரளாவிலும் உள்ளன.

இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருப்பதோடு, அந்த அமைப்புகள் வைத்திருக்கும் பட்டியலிலும் உள்ளன. இந்த வலைத்தளங்களை பார்த்து மாணவர்கள் விழிப்புணர்வு பெறலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, இந்த போலி கல்வி நிறுவனங்களின் மீது இ.பி.கோ. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் முறையற்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் விதமாக, ஒரு சட்ட முன்வரைவு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *