துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநகராட்சியின் புதிய திட்டங்கள் தொடக்க விழா சைதாப்பேட்டையில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
ஏழை எளிய மக்களும் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், இ.சி.ஜி. உள்பட 18 விதமான பரிசோதனைகள் செய்யப்படும். இதற்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சைதாப்பேட்டை, பெரம்பூர், திருவான்மியூர், வேப்பேரி, சூளை ஆகிய 5 இடங்களில் உள்ள மாநகராட்சி படுப்பாய்வு கூடங்களில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்காக வள்ளுவர் கோட்டம், பெரம்பூர் ஆகிய இடங்களில் 2 டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று ஒரே நாளில் தமிழ் பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தங்க மோதிரங்கள் வழங்கினார். சென்னை மாநகராட்சியில் 9 மண்டலங்களிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசும் வசதியை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு எந்திர பெருக்கியையும் வழங்கினார்.
புதிய திட்டங்களை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-
தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர்கள் எழுச்சி நாள். ஏழைகள் வாழ்வு மலர மாவட்டங்கள் தோறும் சுற்றி வந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் மாநகராட்சியும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் பெருமிதம் அடைகிறது.
தமிழ் பெயர் சூட்டும் திட்டத்தை அறிவித்த பிறகு தமிழ் பெயர் சூட்டும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்கள் நடத்திய சர்வேயில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2 சதவீதம் பேருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால்தான் கடந்த மாதம் மாணவ- மாணவிகள் உள்பட ஒரு லட்சம் பேருக்கு சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1604 பேருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்தி விடலாம். எனவேதான் 2 இடங்களில் இலவச டயாலி சிஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து உடல் பரிசோதனை செய்ய முடியாத ஏழை எளிய மக்கள் பயன்பெற முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த சிறப்பான திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமிஷனர் கார்த்திகேயன், துணை மேயர் சத்யபாமா, எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, சைதை கிட்டு, கவுன்சிலர்கள் மகேஷ்குமார், காஞ்சனா, லதா செல்வகுமார் கலந்து கொண்டனர்.
Leave a Reply