சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளதால், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
முதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று முதல்வர் கருணாநிதி கடுமையான கண்டனத்துடன் கூடிய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் தேதிக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
முக்கிய கட்சியான அதிமுக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுகவும் கூட ஆட்சேபிக்கலாம் என்று தெரிகிறது. காரணம், வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே ஒரு மாத கால இடைவெளி இருப்பதை அது விரும்பாது என்பதால்.
இந்தநிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளகது. இருப்பினும் இக்கூட்டத்தில் தேர்தல் தேதி தொடர்பாகவும் கட்சிகள் தங்களது குறைபாடுகளை எடுத்து வைக்கும் என்று தெரிகிறது.
முக்கியக் கட்சிகள் பலவும் தேர்தல் தேதிக்கு அதிருப்தி தெரிவித்துள்ளதால், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Leave a Reply