சேலம்:”தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் கருணாநிதியின் படம் பிரின்ட் செய்யப்பட்ட பாமாயில், ஆட்டாமாவு, மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டாம்’ என, விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், 29 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம், பொது வினியோகத் திட்டத்தில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், மளிகை பொருட்கள், ஆட்டாமாவு ஆகியவை, ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் திட்டத்தை தி.மு.க., அரசு அமல்படுத்தியது.அதை தெரியப்படுத்தும் வகையில், அந்த பொருட்களின் பாக்கெட்டுகளில், தமிழக முதல்வர் கருணாநிதியின் படம் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால், முதல்வர் கருணாநிதியின் படத்தை மறைத்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் படத்தை மறைப்பதற்கான ஸ்டிக்கர்கள், விற்பனையாளர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.அதனால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், ஆட்டாமாவு, மளிகை பொருள் பாக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என, விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.நேற்று முதல், ரேஷன் கடைகளில், முதல்வர் படம் பிரின்ட் செய்யப்பட்ட, பாக்கெட் பொருட்கள் வழங்குவதை, விற்பனையாளர்கள் நிறுத்தி விட்டனர்.
Leave a Reply