மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்த அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதி கசாப் மீது மும்பை தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். தூக்கு தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
கசாப் தற்போது மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளில் ஜெயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் நடவடிக்கையாக கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நகல் ஹோலி பண்டிகையின் முதல் நாளான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கசாப்பிடம் வழங்கப்பட்டது.
கசாப்பின் வக்கீல் பர்கானா ஷா, யாகூப் சைக் ஆகியோர் ஜெயிலுக்கு சென்று ஜெயில் அதிகாரிகளை சந்தித்து தீர்ப்பு நகலை வழங்கினார்கள். ஜெயில் அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டு கசாப்பிடம் வழங்கினார்கள்.
1000 பக்கங்கள் கொண்ட உத்தரவு நகல் 5 பாகங்களாக இடம் பெற்று இருந்தது. அதை கசாப் பெற்றுக் கொண்டான். கசாப் தூக்கு தண்டனையை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளான். அப்பீல் செய்வதற்கு வசதியாக இந்த தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் கசாப் வக்கீல்கள் மூலம் அப்பீல் மனுதாக்கல் செய்யப்படுகிறது. அங்கு மனு தள்ளுபடியானால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப வாய்ப்பு அளிக்கப்படும். ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.
Leave a Reply