திருவனந்தபுரம் : சுப்ரீம் கோர்ட் நியமித்த ஒருங்கிணைப்பு கமிட்டி, வரும் 9ம் தேதி முல்லை பெரியாறு அணையின் அடித்தளத்தை ஆய்வு செய்யும் பணியை துவக்க உள்ளது.
தமிழக – கேரள எல்லையை ஒட்டி இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே, முல்லை பெரியாறு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என தமிழகமும், அணைக்கு உறுதி தன்மை குறைந்துவிட்டது.
எனவே அதன் அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளது. புதிய அணை குறித்து சுப்ரீம் கோர்ட் உயர் மட்டக் குழுவை நியமித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நியமித்த ஒருங்கிணைப்பு கமிட்டியினர் வரும் 9ம் தேதி முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வருகின்றனர்.
அணையின் மேல் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அணையின் அடித்தளம் வரை சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். முழுக்க முழுக்க பலத்த பாதுகாப்போடும் ரகசியமாகவும் நடத்தப்பட உள்ள இந்த ஆய்வின் போது, பத்திரிகையாளர்களுக்கும், மாநில அதிகாரிகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஆய்வின் போது அணைக்கட்டு பகுதிக்குள் பத்திரிகையாளர்கள் நுழைந்தால், ஆய்வு பணி நிறுத்தப்படும் என்றும் மாநில அரசுக்கு ஒருங்கிணைப்பு கமிட்டியினர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை கவனித்து வரும் மாநில அதிகாரிகளுக்கு கூட இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அவ்வதிகாரிகளையும் ஆய்வு நேரத்தில் அங்கு இருக்கக்கூடாது என அக்கமிட்டியினர் மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆய்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு நியமிக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற ஆட்களை ஆய்வு பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. ஆய்வு பணிகள் வரும் 26ம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply