ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரும், அவருடைய சொத்துக்களின் பாதுகாவலருமான சாதிக் பாட்சா நேற்று சந்தேகத்துக்கு இடமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், சொத்துக்களின் பாதுகாவலருமான அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்த செய்தி ஆகும்.

அந்த சமயத்தில் ரமேஷ் எங்கே உண்மையைச் சொல்லி, அரசாங்க சாட்சியாக மாறிவிடுவாரோ என்ற பேச்சும் இருந்தது. தற்போது சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முழுமையான உண்மையையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் நினைத்தால், விசாரணை முடியும் வரை அனைத்து சாட்சிகளையும் மத்தியப் புலனாய்வுத் துறை கட்டுப்பாட்டிலோ, நீதிமன்றக் காவலிலோ வைக்க வேண்டும்.

மேலும், சிறையில் உள்ள ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இல்லையனில் சாதிக் பாட்சாவின் நிலைமை தான் ராசாவுக்கும். மத்தியப் புலனாய்வுத் துறை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை நெருங்கக் கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம்.

தற்போது நடந்துள்ளது கொலையா? அல்லது கட்டாய தற்கொலையா? என்று சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

அவ்வாறு விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தயங்கினால், உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் தலையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *