நியூயார்க்: உலக போலீஸ்காரனாக மீண்டும் தடியைத் தூக்கியுள்ளது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்.
தங்களின் நெடுநாள் ‘உறுத்தலான’ லிபிய அதிபர் கடாபிக்கும் சதாம் உசேன் கதியைக் கொடுக்கும் முடிவோடு களமிறங்கியுள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலையை கைகட்டி வேடிக்கைப் பார்த்த இந்த நேச நாடுகள், இப்போது லிபியா மீது மட்டும் வெறித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக லிபிய அதிபர் கடாபியை ஒழித்துக் கட்டும்வகையில் விமானத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று, உலக நாடுகளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. இப்போதைக்கு முதல் விளைவாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2 டாலர்கள் உயர்ந்துள்ளது பேரலுக்கு. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 112 டாலர்களாக அதிகரித்துள்ளது.
அடுத்து வரும் சில நாட்கள் இன்னும் மோசமான விலை உயர்வைச் சந்திக்கக் கூடும் என்றும், கிட்டத்தட்ட ஈராக் போரின்போது நடந்தது போன்ற ஒரு நிலைமை வரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர் சந்தை நிபுணர்கள்.
வளைகுடா நாடுகளான ஏமன் மற்றும் பஹ்ரைனிலும் இப்போது புரட்சி என்ற பெயரில் பெரும் கலவரம் மூண்டுள்ளது. இங்கும் நேச நாடுகள் தலையீடு இருக்கும் என்று கூறப்படுவதால், எண்ணெய் விலை உயர்வை இன்னும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
Leave a Reply