ட்ரிபோலி: லிபியாவில் அமெரிக்கா வின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் கடாபியின் மாளிகை தரைமட்டமானது.
லிபியாவில் அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். ஆனாலும் புரட்சிப் படை லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசி உள்ளிட்ட 4 நகரங்களை கைபற்றியது.
அவற்றை மீட்க ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. அடுத்து பெங்காசியை குறிவைத்தபோது தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை கடாபி காற்றில் பறக்கவிட்டார். இதையடுத்து லிபியா மக்களைக் காப்பாற்ற ராணுவ நடவடிக்கை எடுப்பதென்று ஐநா தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று அதிகாலையிலேயே ராணுவ தாக்குதலை துவங்கின. பிரான்சின் போர் விமானங்கள் பெங்காசி நகரின் முக்கிய ராணுவ நிலையங்களை குண்டு வீசித் தாக்கின. அமெரிக்க கூட்டுப் படைகள் ட்ரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகள் வீசின. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ராணுவடாங்கிகள் தீப்பிடித்தன.
இந்த ஏவுகணை தாக்குதலில் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர், 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனாலும் ட்ரிபோலி, சிர்தே, ஜீவாரஹ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை ட்ரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் 4 அடுக்கு மாளிகையை குறி வைத்து ஏவுகணைகள் வீசின. இதில் மாளிகை தரைமட்டமானது.
இந்த மாளிகை தான் கடாபியின் அதிகார மையமாகவும், ஆலோசனைக் கூடமாகவும் இருந்து வந்தது. அமெரிக்க தாக்குதலில் இருந்து கடாபியின் ஆதரவாளர்கள் பலர் மனிதக் கேடயமாக இருந்து அவரை காப்பாற்றி வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்குதலில் அவர்களில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் எண்ணிக்கை தெரியவில்லை.
இதற்கிடையே போர் நிறுத்தம் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருவதாக லிபியா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. லிபியாவில் இன்னும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply