வாகனங்கள் மற்றும் உணவிற்கான கட்டணம் பட்டியல் வெளியிட்டுள்ளது தேர்தல் கமிஷன்

posted in: மற்றவை | 0

காஞ்சிபுரம் : தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கும் கட்டணம் நிர்ணயித்து தேர்தல் கமிஷன் பட்டியல் வெளியிட்டுள்ளது.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் செல்லும் வாகனங்களுக்கு எவ்வளவு வாடகை, டிரைவர்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை கணக்கிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆட்டோ ரிக்ஷாவிற்கு 650 ரூபாய், கார்களுக்கு 1,200 ரூபாய், “ஏசி’ கார்களுக்கு 1,400 ரூபாய், “ஏசி’ சொகுசு கார்களுக்கு 2,600 ரூபாய், பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஸ்கோடா கார்களுக்கு 5,000 ரூபாய், 12 சீட்டுகளுடன் கூடிய மேக்சிகேப் வாகனங்களுக்கு 1,500 ரூபாய், டெம்போ டிராவலர், டாடா சுமோ போன்ற வாகனங்களுக்கு 1,700 ரூபாய், 50 சீட்டுகள் மற்றும் அதற்கு குறைவான சீட் கொண்ட பஸ்களுக்கு 2,400 ரூபாய், 50 சீட்டுகளுக்கு மேலிருக்கும் பஸ்களுக்கு 2,700 ரூபாய், லாரிகளுக்கு 1,350 ரூபாயிலிருந்து 1,850 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவர்களுக்கு பேட்டா 230 ரூபாய், கண்டக்டர்களுக்கு 180 ரூபாய், லாரி கிளீனர்களுக்கு 140 ரூபாய் என கணக்கிட வேண்டும். ஒற்றை மாட்டு வண்டிக்கு 103 ரூபாய், இரட்டை மாட்டு வண்டிக்கு 163 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதேபோல் பேனர்கள், சவுக்கு கட்டைகள் போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உணவு வகைகளில் ஒரு இட்லிக்கு 4 ரூபாயிலிருந்து 7 ரூபாய், பொங்கல் ஒரு கப் 18 ரூபாயிலிருந்து 25 ரூபாய், பூரி ஒரு செட் 18 ரூபாயிலிருந்து 25 ரூபாய், போண்டா, வடை ஒன்று 9 ரூபாயிலிருந்து 12 ரூபாய், தோசை 18 ரூபாயிலிருந்து 25 ரூபாய், வெங்காய தோசை 22 ரூபாயிலிருந்து 28 ரூபாய், மசால் தோசை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய், உணவு 30 ரூபாயிலிருந்து 45 ரூபாய், எலுமிச்சை, புளி, தயிர் சாத வகைகள் ஒரு கப் 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய், முட்டை தோசை, மீன் வறுவல் ஒன்று 25 ரூபாயிலிருந்து 40 ரூபாய், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி அரை பிளேட் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய், டீ, காபி 9 ரூபாயிலிருந்து 12 ரூபாய், ஒரு லிட்டர் குடிநீர் 14 ரூபாயிலிருந்து 16 ரூபாய், 2 லிட்டர் குடிநீர் 22 ரூபாயிலிருந்து 24 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *