விஜயகாந்த் தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி தொண்டர்கள் மனு

posted in: அரசியல் | 0

சென்னை: தங்களுக்காக சீட் தரக் கோரி மனு செய்வதை விட தங்களது அபிமானத் தலைவர்களுக்கு சீட் தரக் கோரி தொண்டர்கள் மனு செய்வது தற்போது புதிய பேஷனாகியுள்ளது.

முன்பெல்லாம் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர்தான் விருப்ப மனுக்களைத் தருவார்கள், கட்சியிடம் விண்ணப்பிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் கட்சித் தலைவர்களுக்கு சீட் தரக் கோரி விண்ணப்பிப்பது தொண்டர்களின் வாடி்க்கையாகி வருகிறது.

சமீபத்தில் இப்படித்தான் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கிய பலரும் ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி விருப்ப மனுக்கள் கொடுத்தனர்.

அதேபோல திமுகவிலும் இதே நிலை தொடர்கிறது. இந்த வரிசையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது.

தேமுதிக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் தரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அது தொடங்கியது. வருகிற 6ம் தேதி வரை மனுக்களைப் பெறவுள்ளனர்.

கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் இதையொட்டி கூட்டம் நிரம்பி வழிந்தது.பலரும் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கி நிரப்பிக் கொடுத்தனர். அவர்களில் பலரும் விஜயகாந்த் தங்களது தொகுதியில் போட்டியிடக் கோரி விருப்ப மனுக்களைக் கொடுத்தனர். விஜயகாந்த்தின் மச்சானும், கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான சுதீஷுக்கு ஆதரவாகவும் சிலர் விருப்ப மனுக்களைக் கொடுத்ததைக் காண முடிந்தது.

தமிழகத்தில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ. 10,000 கட்டி விண்ணப்பிக்கலாம். தனித் தொகுதியாக இருந்தால் ரூ.5000 கட்டினால் போதுமாம்.

புதுச்சேரி தொகுதிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுத் தொகுதிக்கு ரூ. 5000மும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500மும் கட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *