விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள்

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் அக்கட்சி அதி்முக கூட்டணியில் இடம் பெற்று 9 தொகுதிகளில் போட்டியிட்டது நினைவிருக்கலாம்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை விரைவுபடுத்தியுள்ளது திமுக. இதுவரை பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் இழுபறியாக உள்ளது. இதுவரை எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது திமுக. நேற்று இரவு திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழு, அறிவாலயம் வந்து இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இதன் இறுதியில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள் தருவது என முடிவானது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதியுடன் திருமாவளவன் குழுவினர் சந்திப்பை மேற்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திருமா கட்சியையும் சேர்த்து தற்போது 44 தொகுதிகளைப் பங்கீடு செய்துள்ளது திமுக. இதில் பாமகவுக்கு 31, முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் 190 சீட்களே கையில் உள்ளன. இதை திமுக, காங்கிரஸ், பிற தோழமைக் கட்சிகளுக்குப் பங்கீடு செய்ய வேண்டும். திமுக இந்த முறை குறைந்தது 130 சீட்களிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 50 சீட்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதிப் பங்கீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில்,எங்களுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம், தீவிரக் களப் பணியாற்றுவோம் என்றார்.

முன்னதாக அதிமுகவுடன் சேரப் போகிறார் திருமாவளவன் என்று செய்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *