சென்னை : கடந்த சட்டசபைத் தேர்தலில் கடுமையாக முட்டி மோதியும், விருத்தாச்சலத்தில் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்தது.
அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஜயகாந்த். ஆனால் இந்த முறை அங்கு நிற்காமல் வேறு தொகுதியில் நிற்க அவர் தீர்மானித்துள்ளாராம்.
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே தொகுதியில் பல முறை நிற்பது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும். முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சிலரைத் தவிர மற்ற தலைவர்கள் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது என்பது எப்போதாவதுதான் நடைபெறும்.
இதில் முதல்வர் கருணாநிதி மட்டுமே தலைநகர் சென்னை முதல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே தலைவராக திகழ்கிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி, இந்த முறை திருத்தியமைக்கப்பட்ட திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா இந்த முறை ஆண்டிப்பட்டிக்கு டாட்டா காட்டவுள்ளதாக கூறப்படுகிறது. மாறாக, ஸ்ரீரங்கத்திற்கு அவர் மாறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல தேமுதிக தலைவரான விஜயகாந்த்தும், விருத்தாச்சலத்திற்குப் பதில் வேறு தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. உளுந்தூர்பேட்டைக்கு அவர் குறி வைத்திருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
அதிமுகவுடன் தற்போது தொகுதிப் பங்கீட்டுப் பேரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். பேரம் இன்னும் படியவில்லை என்று கூறப்படுகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு 42 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் தருவதாக அதிமுக கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு விஜயகாந்த்தும் தலையாட்டி விட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இதை இன்னும் அறிவிக்காமல் வைத்துள்ளனர்.
இந் நிலையில், தான் போட்டியிடும் தொகுதி, தனக்குப் பாதுகாப்பான தொகுதி குறித்து விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். அதேபோல தேமுதிகவினர் எங்கெல்லாம் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற பட்டியலையும் அக்கட்சி தயாரித்து வருகிறதாம்.
விஜயகாந்த் தலைமையில், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தரராஜன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக இதே வேலையாகத்தான் உள்ளனராம்.
விஜயகாந்த்துக்கு இந்த முறை விருத்தாச்சலத்தில் வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரை உளுந்தூர்ப்பேட்டையில் நிற்குமாறு கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.
விருத்தாச்சலத்தை விஜயகாந்த் வெறுக்கக் காரணம், சட்டசபையில் கை கொடுத்த அந்தக் கட்சி, லோக்சபா தேர்தலில் கைவிட்டதால்தானாம்.
Leave a Reply