வீரமணி மூலம் திமுக விட்ட மறைமுக ‘வார்னிங்’ எதிரொலி-இறங்கி வருகிறது காங்.

posted in: அரசியல் | 0

சென்னை: இனியும் குட்டக் குட்டக் குனிய வேண்டாம். துணிச்சலுடன் முடிவெடுங்கள் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை, திமுக விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்துக் கொள்ள காங்கிரஸ் வட்டாரம் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாகியுள்ளது. கொடுக்கிற தொகுதிகளைப் பெறத் தயங்கும் காங்கிரஸ் ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால் அந்த அளவுக்கு உங்களுக்குப் பலம் இல்லையே என்று திமுக கூறி வருகிறது. இதனால் இழுபறி நிலவுகிறது.

இந்த நிலையில் பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நேற்று விடுதலைச் சிறுத்தைகள் என மூன்று கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது திமுக. இவர்களுக்கு மொத்தமாக 44 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தற்போது மிச்சம் 190 தொகுதிகள் மட்டுமே உள்ளன.

2 கட்டமாக காங்கிரஸுடன் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. மறுபக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக தொடர்ந்து ஒதுக்கி வருவதால் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை ஒதுக்கவே முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில்தான் நேற்று தி.க. தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையை காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இது தி.க. மூலம் திமுக விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், கருணாநிதியின் மனதில் ஓடுவதைத்தான் கி.வீரமணி தனது அறிக்கை மூலம் படம் பிடித்துக் காட்டியிருப்பதாகவும் கருதப்படுகிறது. அதிகபட்ச பொறுமையுடன் தற்போது கருணாநிதி இருப்பதையும், அதேசமயம், இப்படியே இருந்தால் அது கூட்டணிக்கு நல்லதாக அமையாது என்பதையும் வீரமணி அறிக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது.

முதல்வர் கருணாநிதி ஒரு முடிவெடுக்கும் முன்பு அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து அறிக்கை அல்லது பேட்டி வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீரமணி மூலம் வந்துள்ள அறிக்கை, திமுக ஒரு முடிவெடுக்கத் தயாராகிறது என்பதை மறைமுகமாக கூறுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் தற்போது பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். இடையில் சிலர் அதிமுக பக்கம் போகலாமா என்று ஆலோசனை கேட்டுள்ளனராம். ஆனால் அதை உடனே மறுத்து விட்டது இன்னொரு குரூப். கருணாநிதியிடமாவது இந்த அளவுக்காவது பேச முடிகிறது. இப்போது ஜெயலலிதாவிடம் போனால், மகா கேவலமாக நடத்துவார் என்று கூறி விட்டார்களாம்.

இப்படி திக்கு திசை தெரியாமல் குழம்பி நிற்கும் காங்கிரஸ், ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து திமுக தரும் தொகுதிகளைப் பெறும் முடிவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *