புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
வழக்கு விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் இந்த ஆவணம் காணாமல் போய் உள்ளது’ என, சி.பி.ஐ., கோர்ட்டில் தெரிவித்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் சித்தார்த்தா பெகுரா கோர்ட் காவலில் உள்ளார். இவர், முன் ஜாமீன் கேட்டு, டில்லி கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில் கூறியதாவது: முதலில் வந்தவர் என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் தாக்கல் செய்துள்ள ஆவணம், இந்த வழக்கிற்கு முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. அதை நாங்கள் தொலைத்தொடர்பு துறையில் தேடிய போது கிடைக்கவில்லை. அதை வேண்டுமென்றே சதி செய்து, காணாமல் போகச் செய்துள்ளனர். அதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. இன்னும் சில ஆவணங்கள் கைப்பற்றப்படாமல் உள்ளன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மனுதாரரும், முன்னாள் அமைச்சர் ராஜாவும் சேர்ந்து தான், அந்த நிறுவனத்திற்கு அனுமதியளித்தனர். தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதியளித்துள்ளனர்.
பெகுராவும், ராஜாவின் முன்னாள் தனி செயலர் சந்தோலியாவும் மற்றும் சிலரும் சட்ட ஆவணங்களை சமர்ப்பித்து ஜாமீனில் செல்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு தொலைத்தொடர்பு துறை பாரபட்சமான முறையில் செயல்படுகிறது. பெகுராவிற்கு ஜாமீன் கொடுத்தால், அவர் அரசு அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றவர் என்பதால், ஆதாரங்களையும் ஆவணங்களையும் அழிப்பதற்கு முயற்சிப்பதற்கும், சாட்சிகளை மிரட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு சி.பி.ஐ.,வக்கீல் வாதிட்ட õர்.இதையடுத்து, பெகுராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, டில்லி கோர்ட் மார்ச் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Leave a Reply