18ம் தேதி ராசியான மதுரையில் பிரசாரம் துவங்கும் ஜெ

posted in: அரசியல் | 0

மதுரை: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூட்டுத் தொகை 9 வரும் வகையில் தனக்கு ராசியான வரும் 18ம் தேதி மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மதிமுகவுக்கு மட்டும் தான் இழுபறியில் உள்ளது. அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் சுமூகமாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்குவதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து பிரசாரத்தை துவங்க ஜெயலலிதா தி்ட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனது தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்கத் திட்டமிட்டுள்ளார். அவர் வரும் 18ம் தேதி மாலை சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவங்குவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக அவர் வரும் 18ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கு தான் வழக்கமாக தங்கும் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

அவர் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று வேனில் இருந்தவாறே பிரசாரம் செய்வார். அவர் வந்து இறங்குவதற்கு ஏதுவாக முதுகுளத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணியை அதிமுகவினர் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டு தேர்தலின்போது ஜெயலலிதா தனது பிரசாரத்தை மதுரை கீழவாசல் மைனா தெப்பக்குளம் பகுதியில் இருந்து தொடங்கினார். தற்போதும் இந்த இடத்தில் இருந்து தான் பிரசாரத்தை துவங்குவார் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு ராசியான எண் 9 என்பதால் 18ம் தேதி பிரசாரத்தை துவங்கினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

செல்லூர், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *