50 கி.மீ தொலைவுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் : அதிகம் பிரச்னை

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட சுனாமியால் புக்குஷிமா டாய் இச்சியில் உள்ள, அணு சக்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இங்குள்ள ஆறு அணு உலைகளில் நான்கு உலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அவற்றின் உண்மை நிலை என்ன என்பது பற்றி முழுமையாக தெரிவிக்கவில்லை. அணுமின் நிலையங்களில் தொடர்ந்து கதிர் வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த அணுசக்தி நிலையங்களை சுற்றி 50 மைல் தொலைவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணு உலையிலும், உலைக்கு மேற்புறம், பயன்படுத்தப்பட்ட யுரேனியம் கம்பிகள், தனியாக ஒரு நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருக்கும். உலைகளுக்குள் கடல்நீர் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்ட உடன், இந்த கம்பிகளில் இருக்கும் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த உஷ்ணம் அபரிமிதமானது. தொடர்ந்து 3 மற்றும் 4ம் உலைகளில் இருந்து புகை மூட்டம் எழுந்தது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உலைகளின் மீது தண்ணீர் ஊற்றும் முயற்சி நடக்கிறது. தீயணைப்பு வண்டிகளும் அணு உலைகளின் வெப்பத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ஹெலிகாப்டரிலிருந்து ஊற்றப்படும் நீர் சரியான இலக்கில் பாயாமல் சிதறுவதால் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் இந்த அணு உலைகளுக்கு மேல் பறக்க செய்து நிலைமையை கண்காணிக்கும் படி அமெரிக்கா, ஜப்பானை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே ஜப்பான் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்டாய் விமான நிலையம் போலீஸ் மற்றும் ராணுவ விமானங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. சென்டாய் நகரில் தெருக்களை மூடிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும் மீட்பு வாகனங்களுக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன.

* 8 லட்சம் வீடுகளுக்கு மின் சப்ளை இல்லை
*அணுக்கதிர் அபாயம் இருக்கும் என்ற அச்சத்தில் டோக்கியோ நகரின் வான்வெளியில் விமானங்கள் பறக்காமல் சுற்றி வருகின்றன.
*ஜப்பான் வடக்குப் பகுதியில் 8 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு மின் சப்ளை இல்லை. வாட்டும் குளிரில் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கம்பளியைப் போர்த்தியபடி மிக மோசமான நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.
* குடிநீர் வசதி சரியாக இல்லாததும், மற்ற சுற்றுச்சூழல் பாதிப்பும் பலருக்கு வயிற்றுப் போக்கு நோய் ஏற்படக் காரணமாகிவிட்டது.
* ஜப்பானின் ஆட்டோமொபைல், எலக்டிரானிக் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பான் மொத்த வளர்ச்சி பாதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *