63 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது முறையா?-போட்டு உடைத்தார் கருணாநிதி!

posted in: அரசியல் | 0

சென்னை: கூட்டணி- தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு மீறிய பேராசை முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது.

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டியுள்ள சூழலில் காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர்.

இதுதொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட முன்னேற்ற கழகமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் தோழமை கொண்ட காலத்திலிருந்து, மாநில அரசிலும் மத்திய அரசிலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் அனைவரும் பாராட்டத் தக்க வகையில் ஆட்சி நடந்து வருகிறது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மற்ற தோழமை கட்சிகளோடு உடன்பாடு பற்றி பேசுவதற்கான முயற்சியிலே தமிழகத்தில் ஆளும் கட்சி என்ற நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டது.

திருமதி சோனியாகாந்தி அவர்களை நான் டெல்லியில் சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகின்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசும், திராவிட முன்னேற்ற கழகமும் தோழமை கொண்டு போட்டியிடும் என்று அறிவித்தேன்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது கழகத்தின் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தி.மு.கழகம் 132 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், பா.ம.க. 31 இடங்களிலும், சி.பி.எம். 13 இடங்களிலும், சி.பி.ஐ. 10 இடங்களிலும் போட்டியிட்ட விவரங்களை எடுத்துக்கூறி- தி.மு.கழகம், காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை தவிர்த்து எஞ்சி உள்ள சி.பி.எம், சி.பி.ஐ. போட்டியிட்ட 23 இடங்களை, தற்போது இந்த அணியிலே உள்ள பழைய கட்சிகளை தவிர புதிதாக இந்த அணியில் சேரும் விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக மீதமுள்ள இடங்களை தி.மு.கழகமும், காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசப்பட்டது. அவ்வாறு கணக்கிட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன.

ஆனால் அந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பது 53 என்றாகி, பின்னர் 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம்நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அதனை மேலிடத்திலே தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால் அதன்படி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று இரவு தொலைபேசி வாயிலாகத்தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும், அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்து கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தர வேண்டுமென்றும் தெரிவிக்கின்றார்கள்.

இது முறைதானா?:

காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்ட நேரத்திலே பா.ம.க.வுக்கு 31 இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 இடங்கள், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்கள், இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் என்ற வகையில் தி.மு.க.வுக்கு 122 இடங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

இன்று உரிய முடிவு:

எனவே இதுபற்றி 5ம் தேதி (இன்று) மாலையில் நடைபெற உள்ள உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.க. உரிய முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டில் ஒன்று…

காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும்… போனால் போகட்டும் என்ற முடிவுக்கு முதல்வரும் மற்ற தலைவர்களும் முடிவு செய்துவிட்டதன் விளைவே இந்த அறிக்கை என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது காங்கிரஸுக்கு கருணாநிதி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை. இதற்கு மேலும் பிடிவாதம் காட்டினால் திமுக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும் அறிவிக்கும் திட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *