அடிக்கடி தொடர்ந்து மின் தடை : அதிருப்தியால் மின்வாரியம் திணறல்

posted in: மற்றவை | 0

புறநகர் பகுதியில் தினமும் 3 மணிநேரம் மின்தடை என்பது மாறி கடந்த இரு நாட்களாக, ஒரு நாளில் பல முறை மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலை போல, மின்வெட்டும் சூடு பிடித்துள்ளது, பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை என மொத்த மின் உற்பத்தி அமைப்புகளை கொண்டு, 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் உற்பத்தியை விட மின் நுகர்வு அதிகரித்ததால், பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகத்தில், 2008 செப்., 1 முதல் 2 மணிநேர மின்தடையை நடைமுறைப்படுத்தியது.

கோடை துவங்கியதால் “ஏசி’, ப்ரிஜ், மின்விசிறி பயன்பாடு அதிகரித்ததால், சென்னை தவிர புறநகர் பகுதிகளில், தினமும் மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்பட்டது. அதனையும் மக்கள் சமாளித்தனர். ஆனால், இரு நாட்களாக தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, 11 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரித்து விட்டது. மதிய நேரத்தில் கூட மின்தேவை “கிடுகிடு’வென உயர்கிறது.

ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தி, 9,000 மெகாவாட் ஆக மட்டுமே உள்ளது. சராசரியாக, 1,800 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க, இரு நாட்களாக சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும், 2 மணி நேரத்துக்கு ஒரு முறை திடீர், திடீரென ஒரு மணிநேரம் அல்லது அரை மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது.

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இவ்வாறு திடீர், திடீரென மின்தடை செய்வதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் சமயம் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், தேர்தல் தொடர்பான பணிகளை, அதிகாரிகள் செய்கின்றனர்.

திடீர் மின்தடை, தேர்தல் பணி அதிகாரிகளையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் பணி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தங்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர். மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை அதிகரித்துள்ள நிலையில், 1,500 முதல் 1,800 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது. வெளிமாநிலங்களிலும் மின்தேவை அதிகரித்துள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து போதிய மின்சாரம் கிடைப்பதில்லை.

சென்னைக்கு மட்டும், 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற இடங்களில் மின்தடை அமலில் உள்ளது. தற்போது மின்தேவை அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறை சமாளிக்க சென்னை தவிர புறநகர் பகுதிகளில் மின்தடை நேரம் மட்டுமின்றி, மின்தரம் குறைவதை தடுக்க, ஒரே நாளில் பலமுறை, மின்தடை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, வாரியம் தீவிர முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிமாநிலத்தில் இருந்து எதிர்பார்த்த மின்சாரம் கிடைக்காததால், தமிழகத்தில் இரு நாட்களாக மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதை போல, மின்வெட்டும் சூடு பிடித்துள்ளது பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *