ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் காங்., உறுதியாக வெற்றிபெறும் என்று வேட்பாளர் சிவராஜ் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதே வேளையில், பெண்களின் அமோக ஆதரவு விஜயகாந்திற்குதான் என்று தே.மு.தி.க., வினர் திடமாக கூறி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்கும், காங்., வேட்பாளர் சிவராஜிக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருவரில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் 2 லட்சத்து 6,729 ஓட்டுக்கள் உள்ளது. இதில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 67 ஓட்டுக்கள் பதிவானது. மொத்த ஓட்டு பதிவு 82.75 சதவீதமாகும்.இதில் பெண்கள் மட்டும் 91 ஆயிரத்து 771 பேர் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். பெண்களின் ஓட்டுப்பதிவு 93 சதவீதமாகும். கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இத்தொகுதியில் பெண்கள் ஆர்வமுடன் ஓட்டளித்துள்ளது அனைவரையும் வியப் படைய செய்துள்ளது. இதனால் காங்., கட்சியினர் ஏக உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அரசின் பெரும்பாலான திட்டங்கள் பெண்களை மையப்படுத்தியே அதிகம் நிறைவேற்றப்பட்டதாவும், அவர்கள் ஆளும் கட்சி கூட்டணிக்கு சாதகமாக ஓட்டு போட்டிருப்பர் என்று சிவராஜ் தரப்பினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.அதிலும் பெண்கள் சுயஉதவிக்குழுவினர் அதிக எண்ணிக்கையில் இத்தொகுதியில் அரசின் சுழல்நிதி கடன் பெற்று பயனடைந்துள்ளனர் என்றும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் பலரும் வருவாய் ஈட்ட வழி கிடைத்தது. இத்துடன் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பலருக்கும் அதற்கான அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் இலவச வீடு கிடைக்கும் என்பதால் இவ்விஷயத்தில் ஆண்களை விட பெண்களின் ஆதரவு ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள காங்., கட்சிக்கு அதிகம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் ஓட்டு போட பாகுபாடு இன்றி அனைத்து கிராமங்களுக்கும் காங்., கட்சி சார்பில் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி கொண்டு பெண்கள் நிச்சயம் மாற்றி ஓட்டு போடமாட்டார்கள் என்றும், பெரும்பாலான ஓட்டுகள் காங்., கட்சிக்கு ஆதரவாக பதிவாகியிருக்கும் என்று சிவராஜ் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.இப்படி பல கணக்குகளை போட்டு தங்களுக்கு சாதகம் என்று காங்., கட்சியினர் கூறிவரும் நிலையில் தே.மு.தி.க., வினர் எவ்வித பதட்டமும் இன்றி “கூலாக’ உள்ளனர்.அவர்கள் தரப்பில் கூறும் போது, திட்டங்களை காரணம் காட்டி காங்., கட்சி வெற்றிபெறும் என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது என்று தே.மு.தி.க., வினர் கருத்து தெரிவிக்கின்றனர். விஜயகாந்த் பிரசாரத்திற்காக இத்தொகுதி கிராமங்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் ஆண்களை விட பெண்களின் கூட்டம்தான் அதிகம் இருந்தது. அதேபோல் பிரேமலதா பிரசாரம் செய்தபோதும் பெண்கள் கூடிநின்று அவருக்கு ஆதரவளிப்பதாக ஆரவாரம் செய்ததை காண முடிந்தது.
சிவராஜ் எம்.எல்.ஏ., கடந்த 15 ஆண்டுகளாக தொகுதி முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெண்கள் மத்தியில் தான் அதிக எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது. இப்படி இருக்கையில் பெண்களின் ஓட்டு காங்., வேட்பாளருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பெண்களின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் விஜயகாந்துக்கே கிடைத்துள்ளதால் அவர் வெற்றிபெறுவது உறுதி என்று தே.மு.தி.க., வினர் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் பெண்கள் அதிகம் பேர் ஓட்டளித்திருப்பது தங்கள் கட்சிக்கே சாதகம் என்று இரு கட்சியினரும் கணக்கு போட்டு விவாதம் நடத்தி வருகின்றனர். பெண் வாக்காளர்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வரும் மே 13ல் தெரிந்துவிட போகிறது.
Leave a Reply