லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர். என்னை அவர்களுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்தனர். எனது தந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நான் உதவினால் எனக்கு பாதுகாப்பு அளித்து உதவுவதாகத் தெரிவித்தனர்.
ஆனால் நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன். இது தொடர்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர் எனது தந்தை. அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன் என்றேன்.
பல தருணங்களில் ஒரு மகன் தந்தைக்கு எதிராக மாறலாம். ஆனால் எனக்கும், எனது தந்தைக்கும் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லை.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல்களுக்கு முன்பே வன்முறையே வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள டோரா போரா மலையைவிட்டு வெளியேறிவிட்டேன்.
அதில் இருந்து அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளார்.
முந்தைய நிர்வாகத்தில் நடந்தைவை பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இப்படி ஒன்று நடந்ததா இல்லையா என்று எங்களால் கூற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply