அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் தாராளம்! – மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் அதிகபட்ச அளவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதேபோல வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருள்களுக்கு இணையாக, இந்திய நிறுவனங்களின் பங்குகளைத் தரவும் இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருள்கள், எந்திரங்கள், உற்பத்தி தளவாடங்கள், சாதனைங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள், இவற்றுக்கு பணமாக செலுத்தாமல், தங்கள் பங்குகளை அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என கூறப்பட்டுள்ளது.

விவசாயத்துறையில்…

வேளாண்மைத் துறையில் விதை உருவாக்கம், நடவுக் கருவிகள் உள்ளிட்ட சில விஷயங்களில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதாகவும் இந்த அறிவிப்பில் அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த அனுமதி, ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என்றும், உள்ளூர் விவசாயம் பாதிக்காத அளவு கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன் அனுமதி தேவையில்லை…

ஒரே துறையில் ஏற்கெனவே கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக தொழில் தொடங்கவும், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற தளர்வையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனி இருவகை நிறுவனங்கள்தான் இந்தியாவில்…

மேலும் இனி இந்தியாவில் இரு வகை நிறுவனங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், முதல்வகை வெளிநாடுகளுக்குச் சொந்தமான அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், இரண்டாவது வகை, இந்தியர்களுக்குச் சொந்தமான அல்லது இந்தியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் என்றும் மத்திய அரசு வரையறைப்படுத்தியுள்ளது.

இந்த தாராள வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை தேசிய அளவில் பெரும் விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்படி ராணுவம், பாதுகாப்பு தவிர்த்த அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய ஏதுவாக விதிகள் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ளன. பத்திரிகை, சில்லறை வியாபாரம், விவசாயம் போன்ற முக்கியத் துறைகள் முற்றாக வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஏற்படவிருக்கும் சாதக பாதகங்கள் குறித்து நடுநிலையாளர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சில்லறை மற்றும் விவசாயத்துறை அந்நியமயமாக்கல் மக்களை கடுமையாக பாதிக்கும் என நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசுத் தரப்பில், இந்த முடிவு பெரும் அந்நிய முதலீடுகளை இந்தியாவில் குவிக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள். கடந்த 11 மாதங்களில் மட்டும் 18.3 பில்லியன் டாலர்களாகும். அடுத்த ஆண்டு இது இரு மடங்காக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *