சென்னை: “அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை’ என, சென்னை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதிலளித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் உள்ள பாத்திமா, மீனாட்சி கல்லூரிகளில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டங்களில், தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் பேசினார். அப்போது,தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும் என கூறியுள்ளார். இந்த பேச்சு, ஆளும் கட்சி மாற வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் உள்ளது. “தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும் என பேசுவதை, ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று தான் பொது மக்கள் புரிந்து கொள்வர். தேர்தல் கமிஷன் பிறப்பித்த வழிமுறைகளை இது மீறுவது போல் உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து கலெக்டரை உடனடியாக மாற்ற, தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். எனது மனுவின் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சகாயம் தாக்கல் செய்த பதில் மனு: ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஓட்டின் முக்கியத்துவம், அரசியல் கட்சிகள் தரும் பணத்தை பெறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுவது குறித்து கல்லூரிகளில் நடந்த கூட்டத்தில் பேசினேன். மேலும், பள்ளி மாணவர்களுக்காக, “தினமலர்’ பத்திரிகை நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியிலும் பேசினேன். இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம், பயப்படாமல், பணம் பெறாமல் ஓட்டளிப்பது பற்றியே எனது பேச்சு இருந்தது. நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். கல்லூரிகளில் நடந்த கூட்டங்களில், அரசியல் கட்சிகளிடம் பணம் பெறுவதை தவிர்ப்பதற்கு மனமாற்றம் வர வேண்டும் என வலியுறுத்தினேன். நியாயமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பொது மக்கள் மத்தியில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் உள்ளது.
எனது பேச்சை தவறாக திரித்துள்ளனர். தேர்தலில் அதிகார மாற்றம் வர வேண்டும் என நான் பேசியதாக திரித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுக்கும் வகையில் எனது விழிப்புணர்வு பிரசாரம் உள்ளது. மனுதாரர் கூறுவது போல், தேர்தல் மூலம் அரசில் மாற்றம் வரவேண்டும் என நான் பேசவில்லை. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டை மறுக்கிறேன். எனது பேச்சு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பு, வெறுப்பின்றி, பாரபட்சமின்றி, மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் கடமை ஆற்றுவது தான் எனது முக்கிய பொறுப்பு. தேர்தல் நடத்தை விதியை அமல்படுத்த பறக்கும் படை மற்றும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணையை 7ம் தேதிக்கு “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்துள்ளது.
Leave a Reply