இன்று இரவு மோதல்: கொச்சி அணியை சென்னை வீழ்த்துமா?

ஐ.பி.எல். போட்டியின் 18-வது “லீக்” ஆட்டம் கொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று தற்போது 4வது இடத்தில் உள்ளது. கொச்சி அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி கொல்கத்தா, பெங்களூர் அணிகளை வென்று பஞ்சாப் அணியிடம் தோற்றது. கொச்சி அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இருந்தது. பெங்களூர், புனே வாரியர்ஸ் அணிகளிடம் தோற்று இருந்தது.

சென்னை அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்திலும், கொச்சி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்திலும் உள்ளன. இரு அணியிலும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது போலவே நடப்பு சாம்பியனான சென்னை அணிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் முயற்சியில் கொச்சி வீரர்கள் உள்ளனர்.

கேப்டன் ஜெயவர்த்தனே, மேக்குல்லம், ரவிந்திர ஜடேஜா, ஹோட்ஜே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். சென்னை அணியிலும் திறமை வாய்ந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். கேப்டன் டோனி, ரெய்னா, முரளிவிஜய், மைக்ஹஸ்சி, அல்பி மார்கல், அணிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *