லண்டன்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடக்கிறது. இதைக் காண லண்டனில் வெளிநாட்டவர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ராஜ திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமணம் டிஎல்சி தொலைக்காட்சி மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. வில்லியம் பெற்றோர் சார்லஸ், டயானா திருமணத்தை சுமார் 75 கோடி மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். வில்லியமின் திருமணத்தை இதை விட அதிகமான மக்கள் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் உள்ள பிரபல தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று காலை 11 மணிக்கு(இந்திய நேரப்படி 3.30 மணிக்கு) திருமணம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
ஸ்கை நியூஸ், பிபிசி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைப்பார்.
இந்த ராஜ திருமணத்தை காண சுமார் 6 லட்சம் பேர் கூடுதலாக லண்டனுக்கு வரக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லண்டனில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட ‘ஹேர் பின்னை’ இலங்கை சார்பில் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது. முன்னதாக 1981-ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது. அதன் பிறகு டயானாவுக்கு கொடுக்கப்பட்டது போன்ற நீலக்கல் மோதிரங்கள் விற்பனை சக்கைபோடு போட்டது. தற்போது மீண்டும் நீலக்கல் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திருமணத்திற்கு உலக ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைக்கவில்லை.
இதற்கிடையே திருமணத்திற்காக மக்களின் வரிப்பணம் தண்ணீராக செலவளிக்கப்படுவதாக இங்கிலாந்தின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Leave a Reply