டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளியிட்டு வரும் இரண்டாம் உலையில் ஏற்பட்டுள்ள பிளவை, கான்கிரீட் கலவை கொண்டு மூடும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அணுமின் நிலையத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தின் இரண்டாம் உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த நீர், கடலில் கலந்ததாக செய்திகள் வெளியாயின. இரண்டாம் உலையில் நீர் கசியக் காரணமான பிளவை சரி செய்வதற்காக, அதில் கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடும் முயற்சியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 11ம் தேதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட, “டெப்கோ’ ஊழியர் இருவரின் உடல்கள், கடந்த மார்ச் 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று “டெப்கோ’ நிர்வாகம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின், டெப்கோவின் ஊழியர்கள் பலியாகியுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கதிர்வீச்சு கலந்த நீர் தொடர்ந்து கடலில் கலந்து கொண்டிருப்பதாக ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது. டாய் இச்சி அணுமின் நிலையம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகக் கூடும் என்று ஏஜன்சி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Leave a Reply