இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! – சொல்கிறார் ராஜபக்சே

posted in: உலகம் | 0

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

மும்பையில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ராஜபக்சே கோவிலுக்கு சென்றதும் மத்திய போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை அழைத்து சென்றனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராஜபக்சேவுக்காக பக்தர்களை தடுத்து வைத்த கோயில் நிர்வாகம்

வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ராஜபக்சே நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ராஜபக்சே சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கருவறையைச் சுற்றி வந்தார். தரிசனத்திற்கு பிறகு ராஜபக்சேவுக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ராஜபக்சே ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ.55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார்.

இந்தியா தோற்க ஏழுமலையானிடம் வேண்டுதல்!

பின்னர் ராஜபக்சே நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை.

இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலையானை வேண்டினேன்.

ஆந்திர முதல்வரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…”, என்றார்.

பின்னர் அவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர் அவருக்கு ஏழுமலையான்- பத்மாவதி தாயார் உருவ படங்களை பரிசாக வழங்கினார். இருவரும் சுமார் 30 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

முன்னதாக ராஜபக்சே ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ.55 ஆயிரம் நாணயங்களை துலாபாரம் செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *