இலங்கையில் மனித உரிமை மீறல்: மறு விசாரணை நடத்த கோரிக்கை

posted in: உலகம் | 0

ஐ.நா., : இலங்கையில் 2009ம்

ஆண்டு புலிகளுடன் நடந்த சண்டையில், இலங்கை ராணுவம் சகட்டுமேனிக்கு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2009ம் ஆண்டு ஜனவரி முதல், மே மாதம் வரை கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், நிவாரணப் பொருள் வழங்கும் பகுதிகளிலும், மருத்துவமனைகள் மீதும் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி மக்கள் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா., நிபுணர் குழு இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் நவநீதம் பிள்ளை. இவர், சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக பணியாற்றியவர். மண்டேலாவை ஆங்கில அரசு சிறையில் அடைத்த போது, அவரை பார்க்க அவரது வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக வாதாடி, மண்டேலாவை அவரது வக்கீல்கள் சந்திக்க ஏற்பாடு செய்தவர் நவநீதம் பிள்ளை. தற்போது, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவராக உள்ளார். “இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் பேரில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா., குழு அளித்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மறு விசாரணை தேவைப்படுகிறது. இந்த விசாரணை பாரபட்சமில்லாமல் சுதந்திரமான முறையில் முழுமையானதாக இருக்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *