இலங்கை கிரிக்கெட் அணியில் ‘மேட்ச் பிக்சிங்’-ஹசன் திலகரத்னே புகார்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். மேட்ச் பிக்ஸிங்கை நாம் இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கும் ஏற்படும்.

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருவோரின் பெயர் விவரங்களை விரைவிலேயே வெளியிடுவேன். இந்த மோடி இன்று, நேற்று தொடங்கவில்லை. நீண்டகாலமாகவே உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் 4 வீரர்களை ஏன் கடைசி நேரத்தில் மாற்றினார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். மென்டிசை ஏன் மாற்றினார்கள்?, ரன்னே எடுக்காத கபுகேந்திராவை ஏன் சேர்த்தார்கள்?.

மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது என்கிறேன். இது இப்போது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. இதை வெளியில் சொல்ல பலர், பலமுறை முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்துவிட்டனர்.

எனது இந்தப் பேட்டியை அந்த மேட்ச் பிக்ஸிங் கும்பலும் படிக்கும். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். விரைவிலேயே, உங்கள் பெயர் விவரங்களையும் வெளியில் சொல்வேன்.

இந்த மோசடியை இப்போதாவது, பொறுப்பில் உள்ளவர்கள் தலையிட்டு அடுத்த சில ஆண்டுகளிலாவது முறியடிக்க வேண்டும். ஊழலும், அரசியலும் நிறைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதைச் செய்யத் தவறினால், பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் இலங்கைக்கும் ஏற்படும் என்றார் ஹசன் திலகரத்னே.

2003ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை 10 மேட்ச்களுக்கு இவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *