மருத்துவ கல்வியை மேலும் தகுதியுடையதாக மாற்றும் வகையில் இளநிலை மருத்துவ பட்டதாரிகளுக்கு தேசிய அளவிலான தகுதித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் எஸ்.கே.சரீன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இதற்கான அனுமதியை அளித்தால் வரும் 2013 முதல் இது விருப்ப தேர்வாகவும், 2017-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் கரம்சாத்தில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற எஸ்.கே.சரீன் பேசுகையில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவ தேர்வை முடிக்கும் பட்டதாரிகள் அனைவரின் தகுதியை உறுதிப்படுத்துவதே இந்திய மருத்துவ கவுன்சிலின் நோக்கம். நாட்டில் உள்ள எந்தவொரு மருத்துவ கல்லூரியில் இருந்து பட்டம் பெற்றிருந்தாலும் அனைவரின் தகுதியும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் படித்து முடித்துவிட்டு இந்தியாவில் மருத்துவம் பார்க்க விரும்பும் பட்டதாரிகளுக்கும் இந்த தேர்வு கட்டாயமாக்கப்படும். இணைய தளம் மூலம் நான்கு கட்டங்களாக நடத்தப்பட உள்ள இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கப்படும் என்றார்.
இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் நடத்தப்பட உள்ள தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்தை கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சரீன்.
Leave a Reply