மும்பை: உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கேப்டன் டோணி புதிய அவதாரம் பூண்டுள்ளார். தலையை முழங்க மொட்டையடித்து கம்பீரமாக காணப்படுகிறார் டோணி.
இது வேண்டுதலுக்காக போடப்பட்ட மொட்டையா அல்லது ஸ்டைலுக்காக போடப்பட்டதா என்பது தெரியவில்லை.
டோணியின் முன்னாள் ஹேர் ஸ்டைல் ரொம்ப பிரபலமானது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தலைமுடியைப் போலவே இவரும் நீண்டதாக வளர்த்து வந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதும், முதலாவது டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றதும் ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டார். நீண்டு கிடந்த முடியை வெட்டி டிரிம்மானார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வென்றதும் தலையை மொட்டையடித்துக் கொண்டார் டோணி.
நேற்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில், உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது அழகான கோட்டில், மொட்டைத் தலை பளபளக்க கம்பீரமாக வந்தார் டோணி.
இந்தியா வெற்றி பெற்றால் மொட்டையடித்துக் கொள்வதாக டோணி நேர்த்திகடன் செய்திருந்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து டோணி விளக்கவில்லை. மேலும் எங்கு போய் அவர் மொட்டையடித்தார் என்பதும் தெரியவில்லை.
மொட்டையடித்தாலும் டோணி கம்பீரமாகத்தான் இருக்கிறார்.
Leave a Reply