உலகக் கோப்பையை வென்ற டோணியும், கம்பீரும் எதிரும் புதிருமாக மோதல்

சென்னை: இன்று நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த டோணியும், கெளதம் கம்பீரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போகிறார்கள்.

4வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. கண்கவர்தொடக்க விழாவுக்குப் பின்னர் முதல் போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வலுவாக காணப்படுகிறது. அதேசமயம், இதுவரை கங்குலி தலைமையில் செயல்பட்டு வந்த கொல்கத்தா அணி கெளதம் கம்பீரின் தலைமையில் தனது முதல் போட்டியில் களம் இறங்குகிறது.

இந்தியா உலக்க கோப்பையை வெல்ல டோணியும், கம்பீரும்தான் முக்கியக் காரணம். இறுதிப் போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவரும் சேர்ந்து செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பைப் போட்டு புதிய சாதனையும் படைத்தனர். இந்த நிலையில் உலகக் கோப்பை வெற்றியின் சூடு கூட இன்னும் குறையாத நிலையில் இருவரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போவது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை அதன் பேட்டிங்தான் மிகப் பெரிய பலம். டோணி நல்ல பார்மில் உள்ளார். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் பார்மில் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸின் நாயகன் முரளி விஜய்யும் மீண்டும் ஒரு அசத்தலானை பெர்பார்மன்ஸை கொடுக்கத் தயாராகி விட்டார்.

நெருக்கடியான சமயத்தில் கை கொடுக்க பத்ரிநாத் இருக்கிறார். அனிருத்தா ஸ்ரீகாந்த்தும் பேட்டிங்கில் கலக்கக் கூடியவர்தான். இப்படி பேட்டிங்கில் சிறப்பான நிலையி்ல் இருக்கும் சென்னை அணிக்கு நல்ல பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

முரளிதரன் அணியில் இல்லாததால், தற்போது ரவி்ச்சந்திரன் அஸ்வினுக்கு பெரும் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது. அவரும் இந்திய மைதானங்களில் பிரமாதப்பபடுத்துவார் என்பதால் இந்தியாவின் பந்து வீச்சு நாயகனாக அவர் உருவெடுக்க வாய்ப்புள்ளது. கடந்த 2010 தொடரில் அஸ்வின்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல அல்பி மார்க்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், டிம் செளத்தி, சூரஞ் ரந்தீவ் ஆகியோரும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

கொல்கத்தாவைப் பொறுத்தவரை கம்பீர்தான் முழுப் பலமும். இவர் போக ஜேக்கஸ் கல்லிஸ், யூசுப் பதான், தமிழகத்தைச் சேர்ந்தவரான எல்.பாலாஜி, உலகக் கோப்பையில் அசத்திய ரியான் டென் டஸ்சாட் ஆகியோரும் கொல்கத்தாவுக்குப் பட்டையைக் கிளப்பும் வெற்றியைக் கொடுக்க பரபரப்பாக காத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டோணி தலைமையிலான ஸ்டிராட்டஜி வெல்லப் போகிறது, கம்பீர் தலைமையிலான போராட்டம் வெல்லப் போகிறதா என்பது இன்று இரவு தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *