விருத்தாசலம்: ஜெயலலிதா ஆட்சியில் நினைத்துப் பார்க்கக் கூடிய சாதனை என்று எதாவது நடந்ததா என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
விருத்தாசலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணி, முதன் முதலில் உங்களை சந்தித்தபோது, 40க்கு 40 தந்தீர்கள். 2006ல் பெரும்பான்மை தந்தீர்கள், தமிழகத்தில் திமுக அரசு கருணாநிதி தலைமையில் அமைந்தது.
மூன்றாவது 2009ம் ஆண்டு இந்தக் கூட்டணி மக்களை சந்தித்தபோது அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் மிகப் பெரிய சவாலை உருவாக்கினர். டெல்லியில் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி, திமுகவுடன் மீண்டும் உங்களை சந்தித்த போது ஊடகங்கள், பத்திரிகைகள், மெத்தப்படித்தவர்கள், அறிவுஜீவிகள் எல்லாம் என்ன சொன்னார்கள்?.
ஒரு முறை ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆட்சி செய்ய முடியாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது, திமுக கூட்டணிக்கு தோல்வியே கிடைக்கும் என்று எழுதினர். கருத்து கணிப்பெல்லாம் வெளியிட்டனர்.
ஆனால், அப்போதும் நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லித் தான் ஓட்டு கேட்டோம். 100 நாள் வேலை திட்டம், தகவல் உரிமைச் சட்டம், அங்கன்வாடி திட்டம், முதியோர் பென்ஷன் என, பல சாதனைகளை முன் வைத்து மக்களிடம் ஓட்டு கேட்டோம்.
வெற்றி பெறாது, மீண்டும் ஆட்சி அமைக்காது என்று சொன்னவர்கள் எல்லாம், வாய் அடைத்துப் போகின்ற வகையில், 206 இடங்களை இந்த மக்கள் தந்தனர். 61 இடங்களை கூடுதலாக தந்தனர். தமிழகத்தில் திமுக கூட்டணியே பெருவாரியான இடங்களை வென்றது. இதனால் மீண்டும் மத்தியில் கூட்டணி அரசு அமைந்தது.
இப்போது, நான்காவது முறையாக உங்களை சந்திக்கிறோம். அதே மேதாவிகள், ஊடகங்கள் என்ன எழுதுகின்றனர். திமுக ஒரு முறை ஆட்சி செய்து முடித்து விட்டது. தமிழகத்தில், ஒரு முறை ஆட்சி செய்த கட்சி, மறு முறை ஆட்சி செய்ய முடியாது என எழுதுகின்றனர்.
ஊடகங்களின் கணிப்பை எல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு, கடந்த 10 ஆண்டில், தமிழகத்தில் நடந்த அரசுகளின் ஆட்சியை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஆட்சி செய்திருக்கின்றனர்.கடந்த ஐந்து ஆண்டிற்கு முன்பு திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடனை ரத்து செய்வோம், கிலோ அரிசி 2 ரூபாய்க்கு போடுவோம், வீடு மனை பட்டா தருவோம், வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்குவோம் என கூறியிருந்தனர்.
அந்த தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா கிண்டல் செய்தார், கேலி செய்தார். திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது என்றார்.
நடுநிலையாளர்களை கேட்கிறேன், அரசியல் சாராதவர்களை கேட்கிறேன். நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், தேர்தல் அறிக்கையில் சொன்னதை கருணாநிதி நிறைவேற்றினாரா, இல்லையா?. தேர்தல் அறிக்கையில் சொல்லாத கான்கிரீட் வீடு, காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களையும் கருணாநிதி செய்திருக்கிறாரா இல்லையா?.
ஒரு அரசு என்பது வளர்ச்சித் திட்டங்களையும் செய்ய வேண்டும், வசதித் திட்டங்களையும் செய்து தர வேண்டும். சாலைகள், பாலங்கள், அணைகள், பள்ளிக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கட்டுவது, மின் திட்டங்களை உருவாக்குவது, தொழிற்சாலைகளை உருவாக்குவது வளர்ச்சித் திட்டங்கள்.
இந்தத் திட்டங்களின் பலன் மக்களைப் போய் சேர 10, 15 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஏழைகள், குடியானவர்கள், விவசாயிகள் எல்லாம் காத்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. அவர்களது உடனடித் தேவைகளையும் அரசு செய்து தர வேண்டும். இது தான் வசதித் திட்டம்.
அந்த அடிப்படையில் தான் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச மின்சாரம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயக் கடன் ரத்து ஆகியவை எல்லாம் முதல்வர் கருணாநிதியால் செய்யப்பட்டன. இதை வசதியானவர்கள் தவறு என்று சொல்லலாம். ஆனால், ஏழைகள் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.
விவசாயக் கடன் ரூ. 7,000 கோடியை கருணாநிதி ரத்து செய்ததை பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டும். அப்படிப்பட்ட மாபெரும் உதவி அது.
கலைஞருக்கு முன்னாள் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா இப்படி ஏதாவது ஒரு உருப்படியான மக்கள் திட்டத்தையாவது நிறைவேற்றினாரா. அது வளர்ச்சித் திட்டமோ அல்லது வசதித் திட்டமோ.. எதையாவது செய்தாரா.. உங்களுக்கு ஏதாவது ஒரு திட்டமாவது நினைவுக்கு வருகிறதா.
நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்தது எல்லாம் வேதனைகள் தரும் செயல்கள் தான். ஒரே கையெழுத்தில் நள்ளிரவில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது தான் நினைவுக்கு வருகிறது. அவர்களுக்காக உச்ச நீதிமன்றத்திலேயே நான் வாதாடியது நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என்று நீதிபதி ஷா உத்தரவிட்டது நினைவுக்கு வருகிறது.
மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்து முஸ்லீம்களையும், கிருஸ்துவ மக்களையும் ஜெயலலிதா மிரட்டியது நினைவுக்கு வருகிறது.
கோவிலில் கிடா, கோழி வெட்டக் கூடாது என்று கோமாளித்தனமான சட்டம் கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது. இப்படி ஜெயலலிதாவின் ஆட்சியை நினைத்தால், கொடுமைகள் தான் நினைவுக்கு வருகின்றன என்றார் சிதம்பரம்.
Leave a Reply