பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பலரும், அடுத்து எந்த பாடப்பிரிவினை எடுப்பது, எந்த பாடப்பிரிவை எடுத்தால் நல்லது என்று தெரியாமல் குழம்பி பலரது ஆலோசனையையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி முடித்த மாணவர்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர், அடுத்து என்ன படிப்பது என்று ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். அது அவர்களது ஆர்வம், நன்றாக வரும் பாடப்பிரிவு, அவர்களது லட்சியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முடிவாகும்.
ஆனால், பத்தாம் வகுப்பில் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணிற்குக் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்து படித்து தற்போது பொதுத் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் பலரும், அடுத்து என்ன படிப்பது என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.
யாரிடம் கேட்பது, எங்கு சென்று அறிவது, எப்படி படிப்பை தேர்வு செய்வது என்று புரியாமல், ஒவ்வொருவரும் சொல்லும் போது ஒரு படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு, பிறகு மற்றொரு படிப்பை பற்றி அறிந்து அதை படிக்கலாம் என்று முடிவெடுத்து, அதையும் எடுக்காமல், வேறு ஏதோ ஒன்றை படிப்பது நூறில் 50 விழுக்காடு மாணவர்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.
சிலருக்கு தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவு கிடைக்காமலும் போகிறது.
படிப்புகள் ஏராளமாக உள்ளன. பல்வேறு கல்லூரிகளும், புதிய பல படிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இதனால் மாணவர்கள் எந்தப் பாடத்தை எடுப்பது என்று குழம்புகின்றனர்.
பல நல்ல வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவினை எடுக்கலாம் என்றால், அந்தப் பாடம் எளிமையாக இருக்குமா? கடினமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு சராசரி மாணவனால் படிக்கக் கூடிய பாடங்கள் என்று குறிப்பிட்ட சிலவற்றை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு அந்த வட்டத்திற்குள்ளாகவே சுழல்கின்றனர்.
அதேப்போல இன்ஜினியரிங்தான் படிப்பது என்று முடிவு செய்து விட்டாலும், அதில் எந்த பிரிவினை தேர்வு செய்வது என்று தெளிவில்லாத ஒரு மனநிலையுடன் உள்ளனர் பல மாணவர்கள்.
நாம் எடுக்க நினைக்கும் பாடப்பிரிவினை ஏற்கனவே படித்த அல்லது தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்தித்து, பாடப்பிரிவினை பற்றி கேட்டறிந்து கொள்வதும் நல்லது.
தற்போது தொழில் வாய்ப்பு விரிந்து பரந்து உள்ளது. எனவே தங்களது ஆர்வத்திற்கேற்ப ஒரு துறையைத் தேர்வு செய்து அதில் முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம். கிடைத்த எதையோ படித்து, ஏதோ ஒரு வேலையில் சேருவதை விட, தாங்கள் விரும்பிய துறையில் மிளிர வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மாணவர்கள் எண்ணத்திலும் உதிக்க வேண்டும்.
பிளஸ் 2 வரை சுமாராகப் படித்த மாணவர்கள் கூட, உயர் கல்வியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதை பார்க்கலாம். எனவே படிப்பில் நாம் காட்டும் அக்கறைதான் முக்கியம்.
அதேப்போல, படிக்கும் பாடப்பிரிவை மட்டுமே சிந்திக்காமல், எங்கு படிக்கப் போகிறோம் என்று சிந்தித்து அதற்கேற்ற முடிவை எடுக்க வேண்டும்.
எந்தப் பாடப்பிரிவை எடுத்தாலும் அதற்கேற்ற அளவிற்கு வேலை வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு. ஆனால், வெறும் படிப்பை மட்டுமே நம்பி வேலைத் தேடக் கூடாது.
படிக்கும் சமயத்திலேயே, நாம் படிக்கும் பாடப்பிரிவிற்கு தேவையான அனைத்துத் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒவ்வொரு இளைஞரும், தன்னை நல்ல முறையில் முன்னேற்றிக் கொள்வதற்கான வழியாகும்.
பி.காம். எடுத்தால், உடனடியாக கணினியில் அதற்கு சம்பந்தமான டேலி போன்ற படிப்புகளை படிப்பது நல்லது. வெறும் கல்லூரி படிப்பு மட்டும் எந்த விதத்திலும் முழுமையை ஏற்படுத்தாது. கல்லூரி நாட்களிலேயே, நமக்குக் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
எனவே, நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட, அதில் எப்படி முழுமையாகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். எதைத் தேர்வு செய்தாலும், அதில் நிறைவுடன் இருக்க வேண்டியது மாணவர்களுடையக் கடமையாகும்.
Leave a Reply