சனா : ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஏமனில் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரயோகம் நடத்தினர். இதில், பலர் காயம் அடைந்தனர். “ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்று மக்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. இந்நிலையில், சலே உடனடியாகப் பதவி விலகும்படி, கடந்த 3ம் தேதி வலியுறுத்திய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் அமைப்பு (ஜி.சி.சி.,), 10ம் தேதி தன் நிலையில் இருந்து பின்வாங்கியது. அதிபர் சலே, தன் அதிகாரத்தை துணை அதிபர் அப்துரபூ மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்கும்படி ஆலோசனை கூறியது.
ஏமன் விவகாரத்தில் ஜி.சி.சி., தலையிடுவதை, ஏமன் எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ஜி.சி.சி.,யில் ஓமன், கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை மட்டுமே உள்ளன. ஏமன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று, அதிபர் சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தை சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்தது. ஜி.சி.சி.,யும், ஏமனின் மூன்று எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன. பேச்சுவார்த்தையில் சலேயின் பதவி விலகல் வலியுறுத்தப்படவில்லை என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ஏமனின் ஆறு எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் முகமது சலீம் பசந்த்வா, “எங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன், ஏமன் தலைநகர் சனாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது. அதைக் கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சை நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தமாட் நகரில் அதிபர் ஆதரவாளர்கள் தாக்கியதில், 30 பேர் படுகாயம் அடைந்தனர். அல் ஹூதைதா நகரில் நடந்த போராட்டத்தின் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையில், அதிபர் சலே கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் அவரது கட்சியில் இருந்து விலகி புதுக் கட்சி ஒன்றை துவக்கியுள்ளனர்.
Leave a Reply