டெல்லி: பயணிகளை பெரிதும் பாதித்துள்ள ஏர் இந்தியா விமானிகளின் ஸ்ட்ரைக்கை சட்டவிரோதம் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்ட்ரைக்கு காரணமான விமானிகள் சங்க தலைவர்கள் 6 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது தேசிய விமான போக்குவரத்து நிறுவனம். அவர்கள் சார்ந்துள்ள சங்கத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தது.
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தால் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
திடீர் ஸ்ட்ரைக்…
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன.
இணைப்புக்கு முன்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகள் ஒரு சங்கமாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகள் தனி சங்கமாகவும் செயல்பட்டு வந்தனர். அவர்கள் இப்போதும் தனித்தனி சங்கமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களில் முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பைலட்டுகள், மற்ற பைலட்டுகளுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
பயணிகள் அவதி
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, டெல்லியில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் 36 விமானங்களும், மும்பையில் இருந்து செல்லும் 10 விமானங்களும் ஆக மொத்தம் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தன. விமானங்கள் ரத்து மற்றும் கால தாமதம் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
விமானிகள் வேலை நிறுத்தத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் விமான நிறுவனங்கள் நேற்று தங்களது கட்டணங்களை அபரிமிதமாக உயர்த்தியதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு…
இந்நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஏர் இந்தியா நிர்வாகம் அவசர மனு தாக்கல் செய்தது. நீதிபதி கீதா மிட்டல் வழக்கை விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விமானிகளின் வேலை நிறுத்தத்துக்கு கண்டனம் தெரிவித்து பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிடக்கோரியதுடன், வேலை நிறுத்தமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, விமானிகளின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்த தேசிய விமான போக்குவரத்து நிறுவனம், விமானிகளை வேலை நிறுத்தத்துக்கு தூண்டியதாக ‘இந்தியன் கமர்சியல் பைலட்ஸ் அசோசியேஷன்’ தலைவர் ஏ.எஸ்.பிந்தர், பொதுச்செயலாளர் ரிஷபக் கபூர் உள்பட 6 பேரை உடனடியாக வேலையில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டது. அவர்கள் சார்ந்துள்ள சங்கத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
அமைச்சர் வயலார் ரவி பேட்டி
விமானிகள் வேலை நிறுத்தம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் மீது நடவடிக்கை எடுத்தது சரியே. அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவர்கள் எங்களுக்கு கட்டளையிட, சர்வாதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு, விமான போக்குவரத்து நிறுவனத்தை சிக்கலில் இருந்து, சிரமத்தில் இருந்து மீள ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Leave a Reply