வாக்காளர்களின் புகைப்படம் ஒட்டிய, “பூத் சிலிப்’களை தேர்தல் கமிஷனே வழங்கி வருவதால், கட்சிகள், “பூத் சிலிப்’ வழங்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
தேர்தல் கமிஷன் அதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதால், வாக்காளர்களை நேரில் சந்தித்து, “கவனிக்கும்’ வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், பிரதான கட்சிகள், திளைக்கின்றன.வழக்கமான தேர்தலாக இல்லாமல் இந்தத் தேர்தலை, தமிழக மக்களுக்கு மிக வித்தியாசமான அனுபவமாக தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது. இதனால், ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியான முறையில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.
வாக்காளர்கள், தங்கள் ஓட்டு, எந்த சாவடியில் வருகிறது, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் எந்த வரிசையில் இருக்கிறது என்பன போன்ற விவரங்களை உள்ளடக்கிய, “பூத் சிலிப்’களை அரசியல் கட்சிகள் வழங்குவது வழக்கம். பிரசாரத்துக்கான அனுமதி முடிந்த பிறகு, இந்தப் பணியை இதுவரை அரசியல் கட்சிகளே மேற்கொண்டு வந்தன.இந்தத் தேர்தலில், “பூத் சிலிப்’களை தேர்தல் கமிஷனே வழங்கும் என அறிவித்தது. அதில் வாக்காளர்களின் போட்டோவும் இடம் பெறும் என அறிவித்திருந்தது. இதனால், வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும், “பூத் சிலிப்’ வழங்கும் பணியை தேர்தல் கமிஷன் தடை செய்து விடுமோ என்ற கவலை, கட்சிகளுக்கு ஏற்பட்டது.தமிழகத்தில், பெரும்பாலான வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின், மொத்தமுள்ள, 4 கோடியே, 59 லட்சத்து, 50 ஆயிரம் வாக்காளர்களில், வெறும், 60 ஆயிரம் வாக்காளர்களின் போட்டோக்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இவர்களுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ள, 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி, ஓட்டு போடும் வŒதி உள்ளது.மற்றவர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்கலாம் அல்லது தேர்தல் கமிஷன் வழங்கும் போட்டோவுடன் கூடிய “பூத் சிலிப்’பையே அடையாள ஆவணமாக பயன்படுத்தி ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், “பூத் சிலிப்’புகளுக்கான மவுசு, முன் எப்போதையும் விட அதிகரித்தது.அதே சமயம், “அரசியல் கட்சிகளும் முன்னைப் போலவே “பூத் சிலிப்’களை வழங்கலாம்’ என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால், “பூத் சிலிப்’கள் வெள்ளை நிறத்தில், கறுப்பு மையால் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்; அதில் வேட்பாளரது பெயரோ, கட்சியின் சின்னமோ இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.இதனால், மகிழ்ச்சியடைந்த அரசியல் கட்சியினர், வேக வேகமாக “பூத் சிலிப்’புகள் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்பெல்லாம், “பூத் சிலிப்’புகளை தேர்தல் நாளன்றோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ மட்டுமே வழங்குவர். இப்போதோ, வேக வேகமாக, வீடு வீடாகச் சென்று, அரசியல் கட்சியினர், “பூத் சிலிப்’புகளை வழங்கி வருகின்றனர்.சிலிப்களை இவ்வளவு ஆர்வமாக வழங்குவதற்கு காரணம், வாக்காளர்களை நேரடியாக, தனித்தனியாக சந்திக்க முடியும் என்பது தான்.
மேலும், “பூத் சிலிப்’ வழங்கும் பணியின் போது, தேர்தல் கமிஷனின் கண்காணிப்போ, வீடியோ கேமராவின் பின்தொடரலோ இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி.எனவே, ஆளும் கட்சியினர் இந்தப் பணியில் அதிக வேகம் காட்டி வருகின்றனர். வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடக்கும்போதே, தேர்தலுக்கான, “கவனிப்பும்’ நடந்து விடுகிறது. பணம், பரிசுக் கூப்பன், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என, “பூத் சிலிப்’ கூடவே மற்றவையும் சேர்ந்து வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தாமதமாக விழித்துக்கொண்ட அ.தி.மு.க., அணியினரோ, இப்போது தான், “பூத் சிலிப்’களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு பணபலம் படைத்த கட்சிகளும், இந்த பணியில் ஈடுபட்டிருக்க, பா.ஜ., இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள், “பூத் சிலிப்’ வழங்கும் பணியை மேற்கொள்ளவும் முடியாமல், அவற்றுடன் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களை தடுக்கவும் முடியாமல், அமைதியாக @வடிக்கை பார்த்து வருகின்றன.-நமது நிருபர் குழு-
மந்த கதியில் அரசு இயந்திரம்:தேர்தல் முடிவு எப்படி @வண்டு மானாலும் அமையலாம் என, தமிழக அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தங்கள் நிலைமை கேள்விக்குள்ளாகி விடக்கூடாது என்பதில், அவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய தி.மு.க., அரசு, கடைசி நேரத்தில் போட்ட உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் அவர்களிடம் தயக்கம் தெரிகிறது.”கடந்த முறை தி.மு.க., ஆட்சி முடிந்து, அ.தி.மு.க., ஆட்சி வந்த புதிதில், “அந்தக் கோப்புகளை எடு; இந்தக் கோப்புகளை எடு’ என, இரவு, பகலாக நாங்கள் வேலை பார்க்க நேர்ந்தது. அதே நிலைமை திரும்பவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்’ என்கின்றனர் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.எதுவாக இருந்தாலும், புதிய அரசு அமைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளனர்.-நமது சிறப்பு நிருபர்-
Leave a Reply