சென்னை : “”எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,” என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.
தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:என்னைப் பொறுத்தவரை, நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கிற சூழ்ச்சிக்கு என்றைக்கும் நான் அடிபணிந்தவன் அல்ல. என்னைத் தலைவனாக கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடிபணிய வேண்டும் என கருதுகிறவனும் அல்ல. நானே கைது செய்யப்பட்ட போதுகூட, என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்.இன்றைக்கு கனிமொழியை இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலே தான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என் மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.நான், இன்று காலை ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்தேன். அரசு சார்பில் வேலை இல்லாதோர்க்கு பணிகள் கிடைக்க பாடுபட்டு இருக்கிறோம் என்ற போதிலும், தொண்டறம் பேணும் அமைப்புகளின் துணையுடன், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட கலெக்டர்களோடும் தொழில் நிறுவனங்களோடும் இணைந்து காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பைத் தேடித் தரும் முகாம்களை நடத்தி உள்ளார்.
இந்த முகாம்கள் மூலம், 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே, கனிமொழி, கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் கட்சியிலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக, அவருக்கு எந்தளவுக்கு பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவேன். இதையெல்லாம் பார்த்து பொறாமை காரணமாக, பொறுத்துக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல், கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால், நானே நேரில் சென்று அழைத்து வந்தேன்.அப்படிப்பட்ட நிலையில், நான் என் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, கட்சி சார்பாக கனிமொழியை காப்பாற்றுவது என்பது, கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல், பாதுகாப்பது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.கனிமொழி மாத்திரம் அல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார், மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற பாடு எனக்குத் தான் தெரியும். மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி நான் என்றைக்கும், யாருக்கும், கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
Leave a Reply