சென்னை: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்து வருகிறார்கள், இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 30 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக நான் சுற்றியபோது, அங்குள்ள பெண்களிடம், யாருக்கு வாக்கு? என்று கேட்டபோது, கலைஞருக்குத்தான் வாக்கு என்று பரவலாக கூறினார்கள். அந்த மகராசனால்தான் நாங்கள் ராப்பட்டிணி இல்லாமல் சாப்பிடுகிறோம் என்றும் தெரிவித்தனர்.
மக்கள் மனதில் மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. கலைஞருக்கு ஆதரவான அலை வீசுகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கிவிட்டது. ஆனால், இதை பொறுக்காத சில ஊடகங்கள், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள். நகரில் படித்தவர்களிடம் மட்டும் சுமார் 200 பேரிடம் கருத்துக் கேட்டு சொல்கிறார்கள்.
அரசு மொத்த வரி வருவாயில் 94 சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. மீதமுள்ள 6 சதவீதத்தை வைத்துத்தான் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று ஜெயலலிதா கூறினார். ஒரே நாளில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதா கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யான வாக்குறுதி,
காப்பியடிக்கப்பட்ட வாக்குறுதி. அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு நடிகர், தள்ளாடிக் கொண்டு தினமும் உளறுகிறார். ஜெயலலிதா கூட ஏன் இவரை கூட்டணியில் சேர்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். மக்கள் சரியான தீர்ப்பை எழுத தயாராக இருக்கிறார்கள்.
முதன்முதலாக பாமக, விடுதலை சிறுத்தைகள் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால், வடமாவட்டத்தில் 110 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இது சமூக நீதி கூட்டணி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் முன்னேற மீண்டும் கருணாநிதி முதல்வராக வர வேண்டும். அதற்கு, மு.க.ஸ்டாலினுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
ஜி.கே.வாசன் பேச்சு:
மத்திய அமைச்சர் வாசன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால், சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றிய மு.க.ஸ்டாலின் இங்கு போட்டியிடுகிறார்.
ஒவ்வொரு பதவியிலும் முத்திரை பதித்தவர் அவர். உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர். மாநகராட்சி பள்ளிகளின் கல்வியின் தரத்தை தனியார் பள்ளிக்கு இணையாக உயர்த்தியவர். ஆயிரம் விளக்கு தொகுதியை முன் மாதிரி தொகுதியாக ஆக்கியவர்.
அந்த வாய்ப்பு கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்துள்ளது. ஓரிரு ஆண்டுகளில் கொளத்தூர் தொகுதியும் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும். அதற்காக, இங்குள்ள மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மு.க.ஸ்டாலினை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், மெட்ரோ ரயில் திட்டத்தையே நிறுத்திவிடுவார்கள். அவர்கள் நடைமுறைக்கு ஒவ்வாத மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறார்கள். இருக்க நினைப்பதை விட்டுவிட்டு பறக்க நினைக்க ஆசைப்படுகிறார்கள்.
வாக்குறுதிகளை வாரி வழங்குவது சுலபம். அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது கடினம். ஆனால், கடந்த திமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் 100 சதவீதம் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி இருக்கிறார்.
ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம், உழவர் சந்தை, ஏழை – எளிய பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண உதவி திட்டம் போன்றவற்றை நிறுத்தியவர்கள் அதிமுகவினர். வேதனையான சாதனைகளை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா என்றார்.
Leave a Reply